சோனு சூட்டுக்கு ஐ.நாவின் சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருது: விஜயகாந்த் பாராட்டு!

01 October 2020

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. அதனால், மார்ச் 22 ஆம் தேதிமுதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சென்றார்கள். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் நடிகர் சோனு சூட். 

அதேபோல்வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவிலேயே விமானத்தில் இந்தியா கொண்டு வந்தார். மேலும், ட்விட்டரில் பல்வேறு கோரிக்கை வைத்து உதவி கேட்கும் ஏழைகளுக்கு உதவி வந்தார். அவரின் சேவையை பாராட்டி ஐ.நா மேம்பாட்டுத் திட்டத்தின், சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருது கடந்த திங்கள் கிழமை மாலை சோனு சூட்டிற்கு வழங்கப்பட்டது.   

ஏற்கனவே, பிரியங்கா சோப்ரா, ஏஞ்சலினா ஜூலி, டேவிட் பெக்காம், லியோனார்டோ டிகாப்ரியோ ஆகிய உலக புகழ் பெற்றவர்கள் பெற்றிருக்கும் இவ்விருதினை சோனு சூட்டும் இப்போது பெற்றுள்ளார். கொரோனா தொற்றின் கடினமான சூழலில் மக்களுக்கு மனிதாபிமானத்தோடு உதவியதாலேயே சோனு சூட்டிற்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், நடிகரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சோனு சூட்டை பாராட்டி இருக்கிறார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தில்தான் முதன் முறையாக சோனு சூட் நடிகராக அறிமுகமானார். அதில் நடித்தபிறகுதான் தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதனை பலப் பேட்டிகளில் சோனு சூட்டே நெகிழ்ச்சியோடு சொல்லி விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில்"ஐ.நாவின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருதைப் பெற்றுள்ள சோனு சூட்டிற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றுதெரிவித்துள்ளார்.