மக்களின் உயிரைக் காப்பதற்கு முன்னுரிமை தரவேண்டும்!

16 October 2020

மக்களின் உயிரைக் காப்பதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்று இந்திய அரசை சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) அறிவுறுத்தியுள்ளது.

மிகவும் ஏழை, எளிய மக்கள் மற்றும் நோய் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளவர்களைக் காக்க வேண்டியதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோல நலிவடையும் நிலையில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கரோனா ஊரடங்கு காரணமாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடக்கூடாது என்று ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார்.

ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்துக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் மக்கள் நலனைக் காப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என கவனிக்கும்போது, நோய் தொற்றுக்கு எளிதில் ஆளாகக் கூடிய முதியோர், ஏழைகள் உள்ளிட்டோரைக் காப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் கரோனா ஊடங்குபாதிப்பால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவற்றை காக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து, அவை மீண்டும் செயல்படும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

மேலும், ஸ்திரமற்ற சூழல், கடன்தொகை திரும்பாத நிலை உள்ளிட்டபிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர்சுட்டிக் காட்டினார். கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்ட கிறிஸ்டலினா, இத்தகைய சூழலில் மக்களின் உயிரைக் காப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.