திருவாரூரில் ரேசன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

12 October 2021

திருவாரூரில் ரேசன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அரசு நியாயவிலைக்  கடை பணியாளர் சங்கத்தினர் சிறு விடுப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்துக்கு அரசு நியாயவிலைக்  கடை பணியாளர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார். 

ரேஷன் கடை பணியாளர்களுக்கு மாதந்தோறும் 1-ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும். தகுதி உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு தொகை மற்றும் பணியாளர் சிக்கன நாணயக்  கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் வரவு வைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினரின் சிறு விடுப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்டப்பொருளாளர் குமார், மாவட்டத்  துணைத்தலைவர் தங்கராசு, மாவட்ட அமைப்புச்  செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அனைத்து அத்தியாவசியப்  பொருட்களையும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சிறு விடுப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தையொட்டி ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்  சென்றனர்.

*நிருபர் மீனா திருவாரூர்*