தி.மு.க. வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது: மத்திய மந்திரி முருகன் பேட்டி

17 June 2022

மத்திய மந்திரி எல்.முருகன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த வகையில் 8 ஆண்டில் எண்ணற்ற சாதனைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

70 ஆண்டு காலம் காங்கிரஸ் செய்யாததை 8 ஆண்டுகளில் பாரதிய ஜனதா அரசு செய்து முடித்துள்ளது. வீடு தோறும் கழிவறை வசதி, சுகாதாரமான குடிநீர் திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு ,விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி, உணவு பாதுகாப்பு சட்டம் ,சிறு நகரங்களில் விமான நிலையம்,கடல்பாசி ஆராய்ச்சி மையம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. அரசு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் மானிய விலையில் டீசல் வழங்குவதாகவும் , மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்வதாகவும் வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்தது. ஆனால் தி.மு.க. அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகும் .அதேபோல் தற்போது மோசமான நிலையில் உள்ளது. சேலத்தில் ராணுவ உதிரி பாகங்கள் தொழிற்சாலை, ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால் வேலை இல்லாத இளைஞர்கள் பயன்பெறுவார்கள் . தமிழக கவர்னர் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட சில அரசியல் கட்சியினர் விளம்பரத்துக்காக பேசி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.