கூடுவாஞ்சேரி பகுதியில் வாகன ஓட்டிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் போலீசார்பொது- மக்கள் அவதி

18 April 2021



கூடுவாஞ்சேரி, ஏப்ரல்.18: கூடுவாஞ்சேரி பகுதிகளில் போலீசார் வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால், இப்பகுதி பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா 2- ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க மாநில, மாவட்ட அளவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இரவு, பகல் பாராது நோய் தொற்று பரவாமல் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் போதிய சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக சுற்றித் திரியும் நபர்களுக்கு ரூபாய் 200 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் விதிக்கும் பணிகளை சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை தனித்தனியாக மேற்கொண்டு வருகிறது. நோயின் தீவிரத்தை புரிந்து கொண்டு, தற்போது பொதுமக்களும் முகக் கவசம் அணியத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில், நேற்று மாலை கூடுவாஞ்சேரி, நெல்லிக் குப்பம் பிரதான சாலையில் மலைமேடு பகுதியில், கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக, அரசு அறிவுறுத்தலின் பேரில் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அனைத்தும் முறையாக அணிந்து வந்த வாகன ஓட்டிகளை மடக்கிய போலீசார், உங்களது தலைக்கவசம் மற்றும் முகக் கவசத்தை அனைவரும் கழற்றி விட்டு, அப்படியே போட்டோவுக்கு ஒரு "போஸ்" கொடுங்கள் என்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் தான் எல்லாமே முறையாக அணிந்து உள்ளோமே எங்களை ஏன் வீணாக தொந்தரவு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு போலீசாரோ, இதெல்லாம் ஒரு பார்மாலிட்டிக்கு தான், மீண்டும் நாங்கள் தரும் மாஸ்க்கை போட்டுக் கொண்டு, மீண்டும் ஒரு போஸ் கொடுத்து விட்டு, நீங்கள் போய் கொண்டே இருங்கள், நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம். மாறாக நாங்கள் சொல்லியது போல் கேட்கவில்லை என்றால் அப்படி ஓரமாக போய் நில்லுங்கள் என்று கட்டளையிட்டனர். இதனால் போலீசாரை நாம் ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று புலம்பியவாறே, அவர்கள் சொன்னது போன்று போஸ் கொடுத்து விட்டு, தலையில் அடித்துக் கொண்டவாறு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பீக் அவரால் மாலை நேரத்தில் போலீசார் மேற்கொண்ட இந்த அடாவடித்தனத்தால் அந்தப் பகுதியில் மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய போலீசாரே, இது போன்று இடையூறு ஏற்படுத்தும் சட்ட விரோதச் செயலில் ஈடுபட்டது, தனது மேலதிகாரிகளிடம் தாங்கள் ஒழுங்காக வேலை செய்கிறோம் என்று காட்டிக் கொள்ளவா அல்லது மாஸ்கை அதிகமாக விநியோகம் செய்கிறோம் என்று பொய்யாக கணக்கு காட்டி ஊழல் செய்யவா என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். எப்பொழுதும் பொதுமக்களிடம் மட்டுமே தனது அடக்குமுறை காட்டும் போலீசார், ஏன் அரசு நிர்ணயித்த நேரத்தையும் தாண்டி ஓடும் டாஸ்மாக் பாரை கண்டு கொள்வதில்லை என்று கேள்வி எழுப்பினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.