நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் புகைப்படக் கண்காட்சி

01 October 2021

குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் மகாத்மா காந்தியின் புகைப்பட கண்காட்சி இன்று நடைபெற்றது. 

மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தேச தந்தை மகாத்மா காந்திஜி சத்தியாக்கிரக அறவழிப் போராட்டம் மூலம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன், பல நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தார்.
அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 தேதி டெல்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
காந்திஜியின் பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்றும், நினைவு நாளை தியாகிகள் தினமாக போற்று கின்றனர். இந்த நிலையில் நாளை கொண்டாடவிருக்கும் 152 வது பிறந்த நாளான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் காந்தியை போற்றும் வகையில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் கடந்த 1876ம் ஆண்டு முதல் 1948ம் ஆண்டு வரையிலான மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை பற்றிய புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அவரது குழந்தை பருவம் முதல் இறப்பு வரையிலான புகைப்படங்களை சேகரித்து கல்லூரி மாணவிகள் அறிந்து கொள்ளும் விதமாக உதகையை சேர்ந்த புகைப்பட கலைஞர் மதிமாறன் ஏற்பாடு செய்த இக்கண்காட்சியானது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இதனை பாராட்டி புகைப்பட கலைஞருக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் கல்லூரியின் சார்பாக வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ஷீலா மற்றும் செயலாளர் ஆனி பாம்ப்லானி தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் பேராசிரியர்களான ஷேனி ரஸ்கின், சுதா, சௌமியா ராஜ், ரேவதி, தானிஷ் பாத்திமா, சாந்தி உட்பட கல்லூரி மாணவிகள் பலர் பங்கேற்றனர்.