சி.பி.எஸ்.இ . பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த மறைந்த கோவை யோகா பாட்டி நானம்மாள் !

01 October 2021

கோவை
சி.பி.எஸ்.இ . பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த மறைந்த கோவை யோகா பாட்டி நானம்மாள் !



கோவை கணபதி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் 99 வயதான நானம்மாள் பாட்டி, இவர்  8 வயதிலேயே தனது தந்தையிடம் யோகா கலையை கற்றுள்ளார்.அந்த யோகா கலையை ஆயிரக்கணக்கானோருக்கு கற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நானம்மாள் பாட்டி குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சி.பி.எஸ்.இ.பிளஸ் -1 உடற்கல்வி பாடப்புத்தகத்தில் நானம்மாள் பாட்டி குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது . அதில் இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர் , கோவையை சேர்ந்தவர் எனவும் , 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.இவரிடம் படித்த 600 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியராக பயிற்சி அளிக்கின்றனர் . யோகா பாட்டி நானம்மாள் கடந்த 2016 - ம் ஆண்டு மத்திய அரசின் நாரிசக்தி புரஸ்கார் விருதும் , 2018 - ம் ஆண்டு பத்மஸ்ரீவிருதும் பெற்று உள்ளார்.2019 - ம் ஆண்டு காலமானார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மறைந்த பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டியின் மகனான பாலகிருஷ்ணன் கூறுகையில் தங்களது குடும்ப வாரிசுகள் அனைவரும் யோகா ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும்,தனது 99வயதில் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு சென்று 20லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும்,2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை யோகா ஆசிரியராக உருவாக்கியுள்ளதாகவும்,இதுவரை 500க்கும் மேற்பட்ட விருதுகளையும் தனது தாயார் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.தினந்தோறும் யோகாவை கடைபிடிபதினால் தங்களது குடும்பத்தினர் இதுவரை மருத்துவமனைக்கு சென்றது இல்லை எனவும்,இது போல் அனைவரும் யோகாவை கற்றுக்கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உயிரோடு இருக்கும் பொழுது லட்சக்கணக்கான மாணவர்களுக்கு யோகாவை கற்றுக்கொடுத்த 99வயதான பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டி,தான் இறந்த பின்பும் பள்ளி மாணவர்களுக்கு யோகா குறித்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாட புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது இக்குடும்பம் மட்டுமில்லாமல் கோவை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...