திருவாரூர்-காரைக்குடி இடையே அகல பாதை அமைக்கப்பட்ட பிறகும் ரயில் சேவை இல்லை மீண்டும் இயங்க பொதுமக்கள் கோரிக்கை!

18 June 2021


திருவாரூர்-காரைக்குடி இடையே அகல பாதை அமைக்கப்பட்ட பிறகும் ரயில் சேவை இல்லை என்பதால் மீண்டும் இயங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தபோது 2-வதாக தொடங்கப்பட்ட ரயில் பாதை சென்னையில் இருந்து ராமேசுவரம் வரையிலான ரயில் பாதை ஆகும். இந்த பாதை சென்னையில் தொடங்கி விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, ராமேசுவரம் வரை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வழியாக இயக்கப்பட்ட ரெயில் ‘போட் மெயில்’ என்று அழைக்கப்பட்டது.

சென்னை-ராமேசுவரம் வழித்தடத்தில் உள்ள திருவாரூர்-காரைக்குடி இடையேயான பாதை பல ஆண்டுகளாக மீட்டர்கேஜ் பாதையாக இருந்தது. இதை அகல பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு ‘மீட்டர்கேஜ்’ ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

அகல பாதை அமைக்கும் பணிகள் 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்தது. பணிகள் நிறைவடைந்த பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு ஒரே ஒரு ‘டெமு’ ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்வதற்கு பல மணிநேரம் தாமதமானது.

இந்த வழித்தடத்தில் கேட் கீப்பர்களும் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு, மக்கள் வெறுப்படைந்தனர். அகல பாதை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கிய பிறகும் ரயில் சேவை திருப்தி அளிக்கவில்லை என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவாரூர்- காரைக்குடி வழித்தடத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இதுவரையிலும் ரயில்கள் இயக்கப்படவில்லை என்பது பல்வேறு தரப்பினரையும் விரக்தியில் ஆழ்த்தி உள்ளது. டெல்டாவின் கடைகோடி பகுதிகளாக உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் ரயில் போக்குவரத்து பல ஆண்டுகளாக தடைபட்டு இருப்பதால் இந்த பகுதி போக்குவரத்து வசதியில் பின்தங்கிய பகுதியாக மாறி விட்டதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் திருவாரூர், தஞ்சை, திருச்சி, சென்னை ஆகிய ஊர்களுக்கு எளிதாக செல்வதற்கு திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அதிக எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக சென்னைக்கு ரூ.ஆயிரம் வரை கட்டணம் கொடுத்து பஸ்களில் பயணித்து வருகிறார்கள். ரயில் சேவை தொடங்கினால் ரூ.200 செலவில் திருவாரூர் மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் ஏராளமான ஏழை, எளிய மக்கள் பலன் அடைவார்கள். வியாபார வளர்ச்சிக்கும் இந்த வழித்தடம் உதவும்.

கொரோனா சூழல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பெரும்பாலான ரயில்கள் தற்போது இயக்கப்படவில்லை. இந்த ஊரடங்கிற்கு பிறகாவது நிலைமை மாறி திருவாரூர்-காரைக்குடி இடையே கூடுதல் ரயில்களை இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து எதிர்பார்க்கிறார்கள்.