திருவாரூர் அருகே, கண்ணம்பாடி-தண்டாலம் இடையே அபாய பள்ளத்துடன் குண்டும் குழியுமான சாலை அதிகாரிகள் கவனிப்பார்களா? கிராம மக்கள் கோரிக்கை

30 June 2021


திருவாரூர் அருகே, கண்ணம்பாடி-தண்டாலம் இடையே அபாய பள்ளத்துடன் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கண்ணம்பாடி கிராமத்தில் இருந்து தண்டாலம் கிராமம் வரை 4 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்தச் சாலையில் கண்ணம்பாடி, காரிச்சாங்குடி, மடப்புரம், சமுதாயக்கரை, மேலாளவந்தசேரி, கீழாளவந்தசேரி, தேவங்குடி, அரிச்சபுரம், கருவேலங்குளம், கானூர், ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த தார்ச்சாலை படுமோசமாக பழுதாகி கிடக்க்கிறது எனவும், கோரையாற்றின் கரையோரம் உள்ள இந்த சாலையில் சென்றால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களின் டயர்கள் பஞ்சராகி விடுகின்றன எனவும், இரவு நேரத்தில் சாலையில் செல்பவர்கள் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள் இடறி கீழேவிழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி காயமடைந்து வருவதாகவும் அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெர விக்கின்றனர்.

சாலை பகுதியில் தெருமின்விளக்கு வசதியும் இல்லை. சாலையோரம் கோரையாற்றங்கரையை ஒட்டி அபாயகரமான பள்ளம் காணப்படுகிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் செல்கிறது. தெருமின்விளக்கு வசதி இல்லாத நிலையில் இருசக்கரவாகனங்களில் செல்வோருக்கு ஆற்றங்கரையோர பள்ளம் இருப்பது தெரியாமல் ஆற்றுக்குள் தவறி விழுந்து விடுவோமோ என்ற பெரும் அச்சத்துடன் செல்வதாக கூறுகின்றனர். 

ஆகவே இதனை அதிகாரிகள் கவனித்து கண்ணம்பாடியில் இருந்து தண்டாலம் வரையிலான சேதம் அடைந்த தார்ச்சாலையை அகலப்படுத்தி சீரமைத்து தரவும், சாலை பகுதியில் மின்விளக்கு வசதி செய்து தரவும், கோரையாற்றின் கரையோரம் தடுப்புச்சுவர் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து எதிர்பார்க்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

நிருபர் மீனா திருவாரூர்