விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால் ரேசன் கடைகள் மூலம் வெங்காயம் விநியோகம் - அமைச்சர் காமராஜ் நடவடிக்கை

25 October 2020

ஆண்டு தோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெங்காயம் விலை உயர்வு புது பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. வெங்காய விளைச்சலில் முக்கிய இடம் வகிக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பெய்து வரும் கனமழையே இதற்கு காரணம்.

கனமழையால் விளைச்சல் பாதிப்பு மற்றும் வெங்காயம் வரத்து இல்லாததால் விலை உயர்ந்து காணப்படுகிறது. வெங்காய விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டை தடுக்க தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால் ரேசன் கடைகள் மூலம் வெங்காயம் விநியோகம் நடைபெறும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே மணவிடுதி ஊராட்சி கிடாரம்பட்டியில் கடந்த வாரம் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பருவத்தில் 32 லட்சத்து 41 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இதன் மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.6,130 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் வெங்காய விலை உயர்வு குறித்த கேள்விக்கு, மழையால் ஏற்பட்ட பாதிப்பால்தான் வெங்காயம் விலை உயர்ந்துஉள்ளதாக தெரிவித்தார்.

இந்த விலை உயர்வை அரசு கவனித்து வருகிறது. ஒருவேளை விலை உயர்வு தொடர்ந்து நீடிக்குமேயானால் முதல்வரின் அனுமதியோடு ரேஷன் கடைகளில் வெங்காயம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.