விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பருவகுடி பகுதியில் உள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ எல்லைக்கல்!

10 June 2021


ராஜபாளையம் அருகே பருவகுடி பகுதியில் உள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ எல்லைக்கல் மற்றும் 17 ஆம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு: சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் பருவக்குடி கண்மாய் அருகே வைணவ எல்லைக்கல் மற்றும் அய்யனார் கற்சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருவக்குடி கண்மாய் அருகே களப்பணியின் போது அங்குள்ள நெல் வயலில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லைக்கல் ஒன்றும் அருகே சூரிய காந்தி தோட்டத்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட கல்வெட்டு எழுத்துக்களைக் கொண்டு உற்றுநோக்கும் வைணவ நிலத்தை அடையாளப்படுத்துவதற்கான எல்லைக்கல் என்று எடுத்துக் கொள்ளலாம். சிவன் கோயிலுக்கு தானமாக வழங்க கூடிய பகுதியை தேவதானம் என்றும் வைணவ கோவில்களுக்கு தானமாக வழங்கக்கூடிய நிலங்களை திருவிடையாட்டம் என்றும் அழைப்பார்கள். அந்த வகையில் வைணவ நிலத்தை குறிக்கும் எல்லைக்கல்லில் ஊர் பெயரையும் கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது. அருகே உள்ள சூரியகாந்தி தோட்டத்தில் அமைந்துள்ள அய்யனார் சிற்பம் பூர்ணகலா, புஷ்கலா ஆகியோருடன் அமர்ந்த நிலையில் பட்டைகல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைவிரி சடையுடன் அய்யனார் இடுப்போடு இணைந்த பெல்ட் ஒன்றில் இடது காலை மடக்கி மாட்டியுள்ளவாறும், வலது காலை சற்று கீழே தொங்கவிட்ட நிலையிலும், பூர்ணகலா மற்றும் புஷ்ப கலா இருவரும் இருபுறமும் அமர்ந்த நிலையில் சிற்பம் காணப்படுகிறது. சிற்ப உருவ அமைப்பை கொண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கண்மாய் கரையில் அமைந்துள்ள அய்யனார் சிற்பம் கண்மாய்க்கரை சீரமைப்பின் போது கரையிலிருந்து கீழ் எடுத்துவைத்து வழிபட்டு வருவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இப்பகுதியின் வைணவத்தொடர்பை வரலாற்று ஆய்வுகளின் மூலமாக வெளிக்கொண்டு வரவேண்டும் என்று முனைவர் போ.கந்தசாமி கூறினார்