திமுக சார்பில் போட்டியிடப்போகும் MP வேட்பாளர்கள் இவர்கள்தானா!

13 May 2021

அதிமுகவைச் சேர்ந்த வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி இருவருமே தங்களின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இது தவிர, அ.தி.மு.கவில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மரணமடைந்துவிட்டார். இவருக்கு நான்காண்டுகள் பதவிக்காலம் இருந்தது. இதையடுத்து, மூன்று மாநிலங்களவை இடங்களும் காலியாக உள்ளன. `தற்போது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க பெரும்பான்மையான இடங்களைப் பெற்றிருப்பதால், இந்த 3 தொகுதிகளிலும் தி.மு.கவே வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன,' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தி.மு.க சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரும் ராஜ்யசபா இடங்களைக் கேட்கத் தொடங்கி விட்டனர்.

காலியாக இருக்கும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் மற்ற இரண்டு தொகுதிகளை தி.மு.க எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தி.மு.க சார்பாக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ராஜ்யசபா இடம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜ்யசபா பந்தயத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் இருக்கிறார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே சுப்புலட்சுமி தோல்வியுற்றார். இதையடுத்து, அவருக்கு ராஜ்யசபா கொடுக்கப்படலாம் என்ற விவாதமும் நடந்து வருகிறது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் ராஜ்ய சபா இடங்களை இலக்காக வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டனர். அதேபோல், கோவை மாவட்டத்துக்குப் பிரநிதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அங்குள்ள நிர்வாகிகளில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறித்தும் பேச்சு அடிபடுகிறது. எனினும் திமுகவே இறுதி முடிவு எடுக்கும்.

திமுக - காங்கிரஸ் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றது. 

இந்த 3 இடங்களும் முழுமையான பதவிக்காலங்கள் அல்ல. 5 வருடம், 1 வருடம் என்ற கால அளவிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.