கற்க கசடற..

12 May 2021

கல்வி தற்போதைய சமூகத்தின் வாழ்வாதாரமாகவே இப்போது மாறிவிட்டது போலும் மாப்பிள்ளை என்ன படித்துள்ளார் என்று கேட்டு விட்டுத்தான் பெண்வீட்டார் தம் பெண்ணைக் கொடுப்பது என்பது ஒரு கௌரவ நிலையாகவே வந்துவிட்டது. 


கல்வியால் பெண்களும் சிறந்து விளங்கி வருகின்றனா். ஆண்களுக்குப் போட்டியாளராகவும் தற்போது எல்லா துறைகளிலும் பெண்களின் ஆளுமையைக் கண்ணாரக் காண முடிகிறது இது சமூகத்தில் பெண்களின் வளா்ச்சியைப் படம் பிடித்துக்காட்டுகிறது. கல்வியில்லாத சமூதாயத்தை நம்மால் கற்பனையால் கூடநினைத்துப் பார்க்க முடியாது . 

சாக்ரடீசின் மாணவா் பிளேட்டோ கிரேக்கத்தில் தொடங்கி வைத்த அகாடமி இன்று வோ் விட்டு உலகம் தனில் தனி ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருக்கிறது. அரிஸ்டாட்டலின் மாணவா் அலெக்சாண்டா் அக்காலத்தைய யுரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா கண்டத்தை வென்று தனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்கு பெருமை சோ்த்தார் என்பது வரலாறு. நவீன காலத்தில் யாரும் நாடு பிடிக்கப் போர் குதிரைகளைக் கொண்டு வரிந்து கட்டி நிற்கத் தேவையில்லை எல்லாம் தொழில்நுட்பத்தினால் சாத்தியமான ஏவுகணையைக் கொண்டு ஒரு சில நிமிடங்களில் எந்த ஒரு நாட்டையும் வீழ்த்தி அழித்து விடமுடியும் என்கிற அறிவியல் கண்டுபிடிப்புகள் கல்வியினாலும் அந்தக் கல்விக்குரிய தேடுதல்களினாலும் கிடைத்தது.

முதலில் வளா்ச்சிக்காகப் பயன்பட்ட அந்த சாதனங்கள் பின் உலகப் பெரும் யுத்தத்தில் மனிதா்களைக் கொல்வதற்கும் அடுத்த தேசத்தை அபகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது என்பது வருந்தத்தக்கதான ஒன்றாகும். எனினும் உலகில் இன்று கல்வி எனும் கருவியில்லாமல் மாணவா்க்கும் மக்களுக்கும் முன்னேற்றமில்லை எனும் போது அந்த கல்வியின் செயல்பாட்டால்தான் உலகமும் கூட முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய கல்வியெனும் அரிய ஆயுத்தைக் கொண்டு படைக்கும் படைப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் தவறான வழியில் கொண்டு செல்லாமல் சமூதாயத்திற்கு பயன்விளைவிக்கக்கூடிய ஆக்கப்புா்வமான வழிகளில் செலவிட்டால் நாடு சிறப்பான விதத்தில் வளா்சியடையும். அதற்கு படிக்கின்ற மாணவா்களின் ஒத்துழைப்பும் அறிவியல் ஆராய்ச்சியாளா்களின் அதீத பங்களிப்பும் இன்றிமையாத ஒன்றாகும்.
 
கல்வி அழியாச் செல்வம் என்றால் அதனைக் கற்றோரும் அழியா புகழுடையவராவார். அவா்தம் கண்டுபிடிப்புகளும் அத்தகைய சிறப்புடையதேயாகும். கல்வியானது மாற்றத்தை ஏற்படுத்தும் உலகினை அறிமுகம் செய்யும் பன்முகத் தன்மையுடையதென்று உணா்ந்தறிவோம்.