'எம்.ஜி.ஆர் சிலை சேதம்' விஷமச்செயல்கள் இனியும் தொடர்ந்தால்... ஈபிஎஸ் எச்சரிக்கை

25 January 2022

தஞ்சாவூர் வடக்கு வீதி சிரேஸ் சத்திரம் சாலை சந்திப்பில் சிமெண்டால் செய்யப்பட்ட நான்கு அடி உயர பீடத்தில், இரண்டு அடி உயரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டிருந்தது.

இந்த சிலை இன்று அதிகாலை காணாமல் போனதாக தெரிகிறது.இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அதிமுக பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது சிலை வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு அருகே தள்ளு வண்டியில் சிலை சிதிலமடைந்து கிடந்து கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவினர் மீண்டும் சிலையை அமைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் . இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து , சிலை எதற்காக அகற்றப்பட்டது? சிலையை அகற்றிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்,புரட்சித்தலைவர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும்,பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இத்தகைய விஷமச்செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.