சித்தார்த்தா மறைவுக்கு பிறகு காபி டே நிறுவனம் உயிர்த்தெழ காரணமான 'நிஜ சிங்கப் பெண்' மாளவிகா

12 January 2022

கடன் நெருக்கடி அதிகரித்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பிரபல 'காபி டே' நிறுவன உரிமையாளர் சித்தார்த்தாவின் மனைவி, தனது கணவரின் நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி தற்போது கடன் சுமையை பாதியாக குறைத்து சாதணை பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.'காபி டே' எனப்படும் பிரபல சங்கிலித் தொடர் நிறுவனத்தை நடத்தி வந்தவர் சித்தார்த்தா. கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே திடீரென மாயமானார். இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பின்னர் ஹோய்கே பஜார் பீச் பகுதியில் சித்தார்த்தாவின் உடல் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் கடன் சுமையால் தத்தளித்து வந்த சித்தார்த்தா, கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

சித்தார்த்தாவால் 1993ம் ஆண்டு தொடங்கப்பட்ட காபி டே நிறுவனம், சர்வதேச சங்கிலித் தொடர் நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்தது. நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்தது. பல நாடுகளிலும் கிளை பரப்பி பிரபலமாக விளங்கியது. அரபிக்கா பீன்ஸ் வகை காபி உற்பத்தியில் ஆசியாவிலேயே சித்தார்த்தாவின் நிறுவனம் தான் முதலிடத்தில் இருந்து வந்தது. இருப்பினும் தொழில் போட்டியால் காபி டே நிறுவனம் தொடர் சரிவை சந்திக்க நேர்ந்தது. பங்குச் சந்தையில் சரிவு கண்டதால் கடன் வாங்க நேர்ந்தது. சித்தார்த்தாவின் மறைவின் போது காபி டே நிறுவனத்துக்கு சுமார் 7,000 கோடி ரூபாய் கடன்சுமை இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த நிறுவனம் இனி ஒருபோதும் இந்த கடன் சுமையில் இருந்து மீள முடியாது என அந்நிறுவன ஊழியர்களே கருதினர். இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் காபி டே கடை இருக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்த தனது கணவரின் மறைவு தந்த அதிர்ச்சியில் இருந்து அவரின் மனைவி மாளவிகாவால் அவ்வளவு சுலபத்தில் மீளமுடியவில்லை. இருப்பினும் தனது கணவரின் லட்சத்தித்தை நிறைவேற்றும் நோக்கில், காபி டே நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட மாளவிகா ஹெக்டே, வெறும் 2 ஆண்டுகளில் அந்நிறுவனத்தை தோல்விப்பாதையில் இருந்து வெற்றிப்பாதைக்கு திருப்பியிருக்கிறார்.தீவிரமாக பணியாற்றிய மாளவிகா ஹெக்டே, காபி டே நிறுவனத்தின் கடன் சுமையை இந்த இரண்டு ஆண்டுகளில் பாதியாக குறைத்து தனது நிறுவன ஊழியர்களையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். தற்போது காபி டே நிறுவனத்தின் கடன் சுமை சுமார் ரூ.3,100 கோடியாக குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தை கடன் இல்லாமல் லாப பாதைக்கு திருப்புவதே தனது லட்சியம் என மாளவிகா கூறினார்.கடன் சுமையால் கணவர் தற்கொலை செய்த போதும் மனம் தளராமல் போராடி இவ்வளவு குறுகிய காலத்தில் நிறுவனத்தின் கடன் சுமையை பாதியாக குறைத்த மாளவிகா பெண்களுக்கு முன் உதாரணமாக மாறியிருக்கிறார்.மாளவிகா ஹெக்டே முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் ஆவார். மேலும் இவருடைய மகன் அமர்தியா ஹெக்டே கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமாரின் மகளை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது