கல்லீரல் சார்ந்த பிரச்சனை மற்றும் தீர்வு

19 April 2021

‘‘நாம் உண்ணும் உணவினை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என்று பகுத்து ஆராய்ந்து பிரித்து, அதன் மூலம் சத்துகளையும் சக்தியையும் தருவது கல்லீரல்தான். உணவின் செரிமானத்துடன், நச்சுத்தன்மையை வெளியேற்றுவதிலும் கல்லீரலின் பங்கு மகத்தானது’’ - கல்லீரலின் முக்கியத்துவத்திலிருந்து தொடங்குகிறார் கல்லீரல் மாற்று சிறப்பு மருத்துவரான தினேஷ் ஜோதிமணி.

கல்லீரலின் ஆரோக்கியம் கெட்டால் என்னென்ன நோய்கள் ஏற்படும்?
‘‘க்ரானிக் ஹெபடைட்டிஸ், சிரோசிஸ், End stage liver disease என்கிற கல்லீரல் செயல் இழப்பு என 3 முக்கியமான நோய்கள் இருக்கின்றன. கல்லீரல் கொழுப்பு, மதுப்பழக்கம், ஹெபடைட்டிஸ் பி, ஹெபடைட்டிஸ் சி போன்ற பொதுவான காரணங்களால் இந்த நோய்கள் ஏற்படலாம். துத்தநாகம், இரும்பு போன்ற சத்துகள் கல்லீரலில் அதிகமானாலும் பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு பிறவியிலேயே கல்லீரல் நோய் இருக்கும். கல்லீரலை அந்நியப் பொருளாக நினைத்துக்கொண்டு தாக்கும் ஆட்டோ இம்யூன் ஹெபடைட்டிஸ் பிரச்னையாலும் கல்லீரல் பாதிக்கப்படும்...’’

அறிகுறிகள் என்னென்ன?‘‘மற்ற உடல் உறுப்புகளைப் போல கல்லீரலின் ஆரோக்கியக் குறைவை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியாது. மஞ்சள் காமாலை, உடல் அசதி, எடை குறைவு, கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது, ரத்த வாந்தி, வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது கல்லீரல் பாதிப்பின் அடையாளமாக இருக்கலாம்...’’
கல்லீரல் கொழுப்பு எதனால் ஏற்படுகிறது?

‘‘தேவைக்கும் அதிகமாக நம் உடலுக் குக் கிடைக்கிற கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற உணவுகள் கொழுப்பாக மாறி கல்லீரலில் தங்குவதையே கல்லீரல் கொழுப்பு(Fatty liver) என்கிறோம். கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்தே வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் இப்போது கல்லீரல் கொழுப்பு பிரச்னை அதிகமாகி வருகிறது.

 சாதாரண தொப்பை போலத்தான் ஆரம்பத்தில் தெரியும். 10 - 15 வருடங்களுக்குப் பிறகே சிரோசிஸ்(Cirrhosis) நிலைக்கு மாறும். இதை கவனிக்காவிட்டால் கல்லீரல் செயலிழப்பு உண்டாகும். வாழ்க்கைமுறையை ஒழுங்குக்குள் கொண்டுவருவது மட்டுமே இதற்கு நல்ல தீர்வு.’’கல்லீரல் செயல் இழப்பு வேறு யாருக்கு ஏற்படும்?

‘‘விஷம் அருந்தித் தற்கொலை முயற்சி செய்கிறவர்களுக்கும் ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கல்லீரல் செயல் இழப்பு ஏற்படும். இவர்களுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று சிகிச்சை செய்தாக வேண்டும். தலைவலி மாத்திரைகள் உள்ளிட்ட சில வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், காசநோய் மாத்திரைகள் கல்லீரல் செயலிழப்பை  உண்டாக்குபவை.

அதனால் மருத்துவ ஆலோசனை இல்லாமல் மாத்திரை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.’’மதுப்பழக்கத்துக்கு இதில் பங்குண்டா?‘‘மதுப்பழக்கம் கல்லீரலை பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தியதும் கல்லீரல் முன்னேற்றம் அடையும். இதனால்தான் மதுப்பழக்கத்தை நிறுத்திய சிலர் முன்பைவிட உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதேபோல வைரஸ் பிரச்னை உள்ளவர்களும் சிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமாக இருப்பதை உணர்வார்கள்...’’

கல்லீரல் மாற்று சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?

‘‘உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தாலும் கல்லீரல் அரிதாகத்தான் தானமாக கிடைக்கிறது. மூளைச்சாவு ஏற்பட்டவரிடமிருந்து கல்லீரலை பெற்றாலும்கூட குறிப்பிட்ட நேரத்துக்குள் மாற்றியாக வேண்டும். இதனால் உயிருடன் இருப்பவர்களிடமிருந்தே (Live donor) பெரும்பாலும் கல்லீரல் தானமாகப் பெறப்படுகிறது. சிறுநீரகங்கள் இரண்டு இருப்பதால், ஒன்றை மற்றவருக்கு தானமாக வழங்குகிறோம். கல்லீரல் நமக்கு ஒன்றுதான் இருக்கிறது. ஆனால், கல்லீரலுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. வெட்டப்பட்டாலும் கல்லீரல் வளரும் தன்மையுடையது.

இதனால், ஒரு கல்லீரலின் பாதியை இன்னொருவருக்குப் பொருத்தி உயிர் வாழ வைக்க முடியும். வெட்டப்பட்ட கல்லீரல் 4 வாரத்தில் வளர்ந்து செயல்பட ஆரம்பித்துவிடும். தானம் கொடுப்பவர், பெற்றவர் இரண்டு பேரும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடர முடியும்...’’

 கல்லீரல் பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும்?‘‘ரத்தப் பரிசோதனை, ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி என்கிற வைரஸ் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் என 3 பரிசோதனைகள் இருக்கின்றன. பரிசோதனைகளுக்கான முடிவுகளைப் பெற ஒருநாளாகும். மொத்தப் பரிசோதனைக்கும் சராசரியாக 1,500 ரூபாய் செலவாகும்.’’ ஹெபடைட்டிஸ் பிரச்னை பற்றி...

‘‘ஹெபடைட்டிஸ் பி மற்றும் ஹெபடைட்டிஸ் சி பாதிப்பு ஏற்பட்டிருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. 40 வயதுக்கு மேல் சிரோசிஸ் வந்து நுரையீரல் சுருங்க ஆரம்பித்தால்தான் தெரியும். இதுதான் கடைசியில் கல்லீரல் புற்றுநோயில் கொண்டுபோய்விடுகிறது. வைரஸ் பரிசோதனை செய்துகொண்ட பிறகு, முறையான சிகிச்சையைத் தொடராததாலும் புற்றுநோய் உண்டாகும். மரபு ரீதியான காரணங்களாலும், பாலியல் தொடர்புகளாலும் ஹெபடைட்டிஸ் பி வரலாம். சுகாதாரமற்ற ஊசி, சுகாதாரமற்ற ரத்ததானம் போன்ற காரணங்களால் ஹெபடைட்டிஸ் சி ஏற்படும்.

ஹெபடைட்டிஸ் உள்ளவர்கள் ஆரம்பத்தில் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். கல்லீரல் செயல் இழப்பு ஏற்பட்டுவிட்டால் அதைத் தொடர்ந்து பல உறுப்புகள் செயலிழக்கும் (Multi organ failure) அபாயம் உண்டு. தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் சிறுநீரகத்திலோ, நுரையீரலிலோ நோய்த்தொற்று ஏற்பட்டாலும், இதுபோல பல உறுப்புகள் செயல் இழக்கும்.

Multi organ failure நடந்தால் நோயாளியைக் காப்பாற்றுவதற்கு 10 சதவிகிதம் மட்டுமே சாத்தியம் உண்டு. கல்லீரல் புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர்களையும் காப்பாற்றுவது சிரமம். இதனுடன் உடலின் நச்சுத்தன்மையும் அதிகமாகி சிரமமாகிவிடும்...’’
இந்த அபாயத்தைத் தவிர்க்க முடியுமா?

‘‘ஹெபடைட்டிஸ் பி, ஹெபடைட்டிஸ் சி உள்ளவர்கள் தேவையான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு ஹெபடைட்டிஸை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் அலட்சியமாக இருப்பது, தவறான வழிகாட்டுதலில் தவறான சிகிச்சைகளை முயற்சி செய்து பார்ப்பது என்று பணமும்  ஆரோக்கியமும் கெட்டபிறகுதான் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதனால்தான் சில நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது...’’கல்லீரல் பரிசோதனையை யார் யார் செய்து கொள்ள வேண்டும்?

‘‘ ஹெபடைட்டிஸ் பாதிப்பு 20 வயதுகளிலேயே வருகிறது. கல்லீரல் கொழுப்பு பிரச்னை 35 வயதுகளிலேயே பலரிடமும் பார்க்க முடிகிறது. அதனால் எத்தனை சீக்கிரம் பரிசோதனை செய்துகொள்கிறோமோ அந்த அளவு கல்லீரலுக்கு நல்லது.

 குறிப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், பருமன் கொண்டவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள் அவசியம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தியாவில் எல்லோருமே ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. அறிகுறிகளே இல்லாமல் கல்லீரல் நோய்கள் தோன்றுவதால் கவனம் தேவை.’’கல்லீரல் நோய்களைத் தடுக்க முடியுமா?

‘‘கல்லீரல் தொடர்பான எல்லா நோய்களும் தடுக்கக் கூடியவையே. கல்லீரல் நோய்களுக்கு முன்பு போதுமான மருந்துகளோ, சிகிச்சைகளோ இல்லாத நிலை இருந்தது. இன்று நிறைய மருந்துகளும், நவீன சிகிச்சைகளும் இருப்பதால், கல்லீரல் நோயை குணப்படுத்துவதும் எளிதாகியிருக்கிறது. கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைதான் இருந்தது.

இப்போது நாமே அந்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்துவிட்டோம்...’’நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், பருமன் ஆனவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள் அவசியம் கல்லீரல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

- ஞானதேசிகன்