முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்தார்

14 June 2022

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, காயத்ரி என பலர் நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. படம் வெளியாகி 11 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் விக்ரம் ரூ 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அண்மையில் நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. தொடர்ந்து, கேரளாவில் லோகேஷ் கனகராஜ், அனிருத் கலந்துகொண்ட படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. படத்தின் வெற்றிக்கு ரசிகர்களிடம் நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். அவருடன் விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார். முன்னதாக விக்ரம் வெளியான முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில், "விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு நிகழ்ந்தது. மனமும் நெகிழ்ந்தது" என்று பதிவிட்டுள்ளார்.