ஒன்னு ரஜினி.. இல்லைனா கமல்..3 பேர் டீமை களமிறக்கிய ஸ்டாலின்!

29 May 2022

தமிழ்நாடு அரசு சார்பாக விரைவில் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசியல் உலகிலும், கோலிவுட் உலகிலும் இந்த விருது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளதாம்!


2020 காலகட்டத்தில் அரசியலுக்கு வருவார் என்று தீவிரமாக எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். திமுகவிற்கு எதிராக தீவிரமாக அரசியலை முன்னெடுப்பார், ஆன்மீக அரசியலை அவர் கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிகாந்த் அரசியலில் இருந்து.. என்ட்ரி கொடுக்கும் முன்பே எக்சிட் ஆனார். இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யம் மூலம் கமல்ஹாசன் தீவிர அரசியலை முன்னெடுத்தார்.


சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளையும் பெற்றார். ஆனால் அதன்பின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மகேந்திரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறினர். இதையடுத்து கமல் ஹாசனும் பெரிதாக அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இப்போது கமல்ஹாசனும் முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். விக்ரம் படம் விரைவில் வெளியாக உள்ளது.


இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். இதற்காக டெல்லி, மும்பை, கொச்சி என்று பல மாநிலங்களுக்கு சென்று வருகிறார். இது போக பிக்பாஸ் அடுத்த சீசன் ஷூட்டிங்கிலும் கமல் ஹாசன் பிசியாக உள்ளார். அதேபோல் இன்னும் சில படங்களில் கமல்ஹாசன் கமிட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில்தான் இவர்கள் இருவரில் ஒருவருக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படலாம் என்று ஆளும் தரப்பில் முக்கிய நிர்வாகிகள் கிசுகிசுக்கிறார்கள்.


ஒன்று ரஜினி அல்லது கமலுக்கு விருது வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் சார்பாக 3 பேர் கொண்ட கமிட்டி உருவாக்கப்பட்டு உள்ளது.


இந்த விருதை கமல் அல்லது ரஜினிக்கு வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலத்தில் ரஜினி, கமல் இருவருமே தங்கள் ரூட்டை மாற்றி கொஞ்சம் ஆளும் திமுகவுடன் நெருக்கம் காட்டினர். முக்கியமாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ்தான் வெளியிடுகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழாவில் கூட உதயநிதி, கமல்ஹாசனை மிகப்பெரிய அளவில் புகழ்ந்து பேசினார்.


கமல்ஹாசனை மிரட்டி தான் இத்திரைப்படத்தை நீங்கள் வாங்கி வெளியிடுகிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். கமல்ஹாசனை யாராலும் பயமுறுத்த முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் கூட இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கமல்ஹாசன் - உதயநிதி ஸ்டாலின் இருவருமே மிகவும் நெருக்கமாக இருந்தனர். இது போக நேற்று ஓமந்தூராா் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.


நீண்ட காலத்திற்கு பின் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சி ஆகும் இது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இப்படி இரண்டு பெரிய நட்சத்திரங்களும் சமீபத்தில் ஆளும் தரப்போடு க்ளோசாகி உள்ளது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது இவர்கள் இருவரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


மேலும் ரஜினிகாந்த்க்கு ஏற்கனவே மத்திய அரசு சார்பில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.மேலும் ரஜினி மத்தியில் உள்ள பாஜகவுடன் கொஞ்சம் நெருக்கமாக தான் இருந்து வருகிறார். இருந்த போதும் கமல்ஹாசன் திராவிட இயக்கங்கள் மீது சமீபத்தில் அக்கறை காட்டி வருவதாலும் அடுத்ததடுத்த படங்களை ரெட் ஜெயண்ட் விநியோகம் செய்ய இருப்பதால் கமலுக்கு இந்த விருது வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது