ஹரிநாடார் மீது தற்போது இரண்டு தொழிலதிபர்கள் மோசடி புகார்

15 June 2021

வங்கியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரிநாடார் மீது தற்போது இரண்டு தொழிலதிபர்கள் மோசடி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டவர் ஹரி நாடார். இவர் மீது கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அளித்த மோசடி புகாரும் பேரில் திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ஹரிநாடார் பெங்களூரு போலீசார் சில தினங்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் ஹரிநாடார் மீது குஜராத் மற்றும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர்கள் இருவர் ரூபாய் 100 கோடி வங்கிக் கடன் வாங்கி தருவதாக கூறி 1.5 கோடி பெற்றோர் தங்களை ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். 

பெங்களூருவைச் சேர்ந்த முகமது அலி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த அருள்தாஸ் ஆகியோர் மூலம் தொழில் அதிபர்கள் இஸ்மாயில் சக்கரத், கேரளாவைச் சேர்ந்த பஷீர் ஆகிய இருவருடன் தொடர்பு கொண்டுள்ளார். 

தான் கேப்பிட்டல் யூபி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற கம்பெனியின் ஆசிய நாடுகளுக்கான நிர்வாகி எனவும் இதன் மூலம் இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிக அளவில் கடன் பெற்று கொடுத்துள்ளதாகவும் அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார். 

இதனை உண்மை என்று நம்பிய தொழிலதிபர் இருவரையும் ஹரிநாடார் சென்னை டி நகர் வரவழைத்து ரூபாய் 100 கோடி பணத்தை 6 சதவீத வட்டியில் தான் பெற்றுத் தருவதாகவும் இதற்கு இரண்டு சதவிதம் கமிசன் தனக்கு தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

இதனை அடுத்து மூன்று தவணைகளாக ரூபாய் 1.5 கோடி பணத்தை ஹரிநாடார் தொழிலதிபர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் வங்கி கடன் குறித்து கேட்ட போதெல்லாம் தற்போது தேர்தல் வேலைகளில் பிசியாக இருப்பதாகவும், தேர்தல் முடிந்தவுடன் வங்கி கடன் உடனடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி அவர்களை ஏமாற்றி வந்துள்ளார்.

தொழிலதிபர்கள் இருவரும் தாங்கள் ஹரிநாடாரால் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளனர். கடந்த மாதம் டி நகர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர். விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் மோசடி செய்யப்பட்ட பணம் ஒரு கோடிக்கும் அதிகம் என்பதால் சென்னை மத்திய குற்றப்பிரிவு புகார் அளிக்குமாறு தொழிலதிபர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

அந்த புகாரின் பெயரில் தொழில் அதிபர் பஷீர் சென்னை காவல் ஆணையர் அகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஹரிநாடார் மீது நடவடிக்கை எடுக்குமாறும், தங்களிடமிருந்த ஹரிநாடார் ஏமாற்றிய ரூபாய் 1.5 கோடி மீட்டுத் தருமாறும் புகார் அளித்துள்ளனர். 

ஏற்கனவே வங்கியில் கடன் வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்டு தற்போது கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரிநாடார் மீது தொழிலதிபர்கள் இருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.