பம்மலில் ஹெராயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் கைது

23 February 2021

பம்மலில் ஹெராயின் போதை பொருள் விற்பனையில்  ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் கைது


பம்மல், நாகல்கேணி பகுதியில்,  ஒரு கும்பல் சட்ட விரோதமாக ஹெராயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்  விரைந்து சென்ற போலீசார், அங்கு மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது, அங்கு ஹெராயின் போதைப் பொருள் விற்பனை நடைபெற்று வருவது உறுதி செய்யப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்து வந்து, முறைப்படி விசாரிக்கையில், அவர்கள் அனைவரும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முகமது யூசுப் ஷேக் (31), முகமது உபயதுல் இஸ்லாம்(30), சபீர் அலி(26) மற்றும் ஜஹாங்கிர் ஷேக் (41) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்வது போல், ஹெராயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த, பத்து கிராம் ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ஒரு இலட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்