பாஜக நயினார் மீது கேஸ் போடுங்க.. கொதிக்கும் அதிமுக நிர்வாகிகள்

26 January 2022

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டாக புகார் அளித்துள்ளனர்.

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு நேற்று பாஜகவினர் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் பள்ளி மாணவியை அவரின் பள்ளி நிர்வாகம் மத மாற சொல்லி வறுபுறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்.. இதனால் தமிழ்நாட்டில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



இந்த போராட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை அச்சமின்றி கேள்வி எழுப்பி வருகிறார். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் அதிமுக பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் நடத்தாததை விமர்சனம் செய்து நயினார் நாகேந்திரன் இப்படி பேசி இருந்தார்.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அதிமுக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியின் தயவால்தான் பாஜக 4 எம்எல்ஏக்களை பெற்றது. அதிமுக கூட்டணி இல்லை என்றால் பாஜகவால் வெற்றி பெற்று இருக்க முடியாது.உண்மையில் ஆண்மை இருந்தால் பாஜகவினர் தனித்து போட்டியிடட்டும். நயினார் நாகேந்திரன் பாஜக சார்பாக தனித்து போட்டியிட்டு முடிந்தால் சட்டசபைக்கு செல்லட்டும் என்று அதிமுகவினர் பலர் சவால் விடுத்துள்ளனர்.


அதிமுக நிர்வாகிகள் ராஜ் சத்யன் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கோபமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியில் இருக்கும் சக கட்சியை பற்றி இப்படி பேசுவது மிகவும் தவறானது என்று விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.இந்த நிலையில்தான் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டாக புகார் அளித்துள்ளனர்.

கொளத்தூர் அதிமுக நிர்வாகிகள் இந்த புகாரை அளித்துள்ளனர். சென்னை K5 பெரவள்ளூர் காவல் நிலையத்தில் உதவி ஆணையாளரிடம் கொளத்தூர் அதிமுக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் புகார் மனு அளித்து உள்ளனர். அதிமுக நிர்வாகிகளை பொது இடத்தில் தவறாக பேசிவிட்டார், இவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து புகார் அளித்தனர்.


இவர்களின் புகாரை தொடர்ந்து அதிமுக, பாஜக இடையிலான மோதல் பெரிதாகி உள்ளது.முன்னதாக தான் தெரிவித்த கருத்துக்கு நயினார் விளக்கம் அளித்து இருந்தார். அதில், இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.