உண்ணாவிரதத்தைத் தொடங்கிய விவசாயிகள்!

14 December 2020

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், இன்றுடன் 19 ஆவது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் 'சன்யுக்தா கிசான் அந்தோலன்' விவசாய அமைப்பினர், மூன்று விவசாய மசோதாக்களையும் அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி, டிசம்பர் 14 ஆம் தேதி, அனைத்து விவசாயச் சங்கத் தலைவர்களும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில், இன்று விவசாயிகள் அறிவித்தபடி, உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வர நடக்க இருக்கும் இப்போராட்டத்தில், 40 விவசாயச் சங்கத் தலைவர்கள் ஈடுபடவுள்ளனர். சிங்கு எல்லையில், 25 விவசாயச் சங்கத் தலைவர்கள் ஒரே மேடையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும் டிக்ரி எல்லையில் 25 விவசாயச் சங்கத் தலைவர்களும், உத்தரப்பிரதேசம் - டெல்லி எல்லையில் 5 தலைவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.