நாம் கொண்டாடும் அன்னையர் தினம் எப்படி உருவானது தெரியுமா ?

08 May 2022

அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ். தனது அம்மாவின் உந்துதலின் பேரில் அமெரிக்காவில், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.


இதன் ஒரு பகுதியாக ''மதர்ஸ் டே ஒர்க் கிளப்'' என்ற அமைப்பை உருவாக்கினர். இதன் மூலம் அடிக்கடி மருத்துவர்களை வரவழைத்து, தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, பேணி காத்தல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, எவ்வாறு கல்வி கற்பிப்பது போன்ற பயிற்சிகளை அளித்தார்.


ஒருமுறை தனது தாய் நடத்தி வந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளியில் போதித்துக் கொண்டு இருக்கும்போது, அன்னையைப் போற்றுவதற்கு ஒரு நாள் ''அன்னையர் தினம்'' வரும் என்று பாடி இருந்தது அவரது காதுகளிலும், நினைவிலும் வந்து வந்து சென்றது. இந்நிலையில் அவரது அம்மா 1905ஆம் ஆண்டில் இறந்துவிட, அவரது ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில், 25 ஆண்டுகள் அவரது அம்மா போதித்து வந்த ஆண்ட்ரூஸ் சர்ச்சுக்கு, 1908, மே 10ஆம் தேதி, அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டுகள் கொடுத்து அனுப்பினார்.


அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே கொண்டாடினார். அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அன்னா மேரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் 28 வது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9 ஆம் தேதி கையெழுத்திட்டார். இதையடுத்து, அன்னையர்களுக்கு மரியாதை, அன்பு செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 2வது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது. அப்படி பிறந்தது தான் அன்னையர் தினம்.