ஒளரங்கசீப் இந்துக்களை வெறுத்தாரா?

23 April 2022

ஒன்பதாவது சீக்கிய குரு தேக் பகதூரின் 400வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 21 அன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.


அப்போது,"ஔரங்கசீப்பின் கொடுங்கோல் சிந்தனையிலிருந்து இந்தியா தனது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்கான நம்பிக்கையின் வடிவமாக குரு தேக் பகதூர் இருந்தார்" என்று பேசினார்.ஔரங்கசீப் பற்றி மோதி குறிப்பிடப்பட்டதை அடுத்து, அது சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகத் தொடங்கியது. ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்துகளைப் பகிர்ந்தனர். ஆனால், உண்மை என்ன?


முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பின் நினைவு நாளை ஒட்டி 2018, மார்ச் 3 ஆம் தேதி பிபிசி ஒரு கட்டுரையை வெளியிட்டது. இந்தக் கட்டுரையில் ஒளரங்கசீப்பின் ஆட்சியை வரலாற்றாசிரியர்கள் எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்பதை திரும்பிப் பார்ப்போம்.இந்திய மக்கள் மனதில் இடம் பிடிக்கத் தவறிய ஒரே முகலாய பேரரசர், ஆலம்கீர் ஔரங்கசீப். சாதாரண மக்களிடையே ஒளரங்கசீப்பின் பிம்பம் இந்துக்களை வெறுக்கும் மத வெறியர் என்றே இருந்தது. தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள தனது மூத்த சகோதரர் தாரா ஷிகோவைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை.தனது வயதான தந்தையை, அவரது வாழ்நாளின் கடைசி ஏழரை ஆண்டுகளுக்கு ஆக்ரா கோட்டையில் கைதியாக வைத்திருந்தார். ஔரங்கசீப் தனது சகோதரன் தாராவை தோற்கடித்தபோது இந்தியாவில் பிரிவினைக்கான விதைகள் விதைக்கப்பட்டதாக சமீபத்தில் பாகிஸ்தானிய நாடக ஆசிரியர் ஷாஹித் நதீம் எழுதினார். ஜவகர்லால் நேருவும் 1946 இல் வெளியான தனது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில், ஔரங்கசீப்பை ஒரு மதவெறியராகவும் பழமைவாதியாகவும் சித்தரித்துள்ளார்.


இன்னொரு முகமும் உண்டு


ஆனால், இந்துக்களை வெறுத்ததால் ஔரங்கசீப் கோவில்களை அழித்தார் என்ற வாதம் தவறானது என்று அமெரிக்க வரலாற்றாசிரியரான ஆட்ரி ட்ருஷ்கி தனது 'ஒளரங்கசீப் - தி மேன் அண்ட் தி மித்' என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.நெவார்க்கில் உள்ள ரூட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய வரலாற்றை கற்பிக்கும் ஆட்ரி ட்ருஷ்கி, ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையின் கீழ், இந்து-முஸ்லிம் பகைமையை ஊக்குவித்த பிரிட்டிஷ் காலத்து வரலாற்றாசிரியர்களே ஒளரங்கசீப் பற்றிய இந்த பிம்பத்துக்கு காரணம் என்று எழுதுகிறார். ஔரங்கசீப்பின் ஆட்சி 20 ஆண்டுகள் குறைவாக இருந்திருந்தால், நவீன வரலாற்றாசிரியர்களால் அவர் வித்தியாசமாக மதிப்பிடப்பட்டிருப்பார் என்றும் அவர் இந்த நூலில் கூறுகிறார்.


49 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டார்


ஒளரங்கசீப் சுமார் 49 ஆண்டுகள் 15 கோடி மக்களை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் போது, ​​முகலாயப் பேரரசு பரந்து விரிந்தது. முதல் முறையாக அவர் கிட்டத்தட்ட முழு துணைக்கண்டத்தையும் தனது பேரரசின் ஒரு பகுதியாக மாற்றினார்.ஔரங்கசீப் மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் உள்ள ஒரு எளிய கல்லறையில் புதைக்கப்பட்டார் என்று ஆட்ரி ட்ருஷ்கி எழுதுகிறார். இதற்கு நேர்மாறாக, டெல்லியில் ஹுமாயூனுக்காக ஒரு சிவப்பு கல் கல்லறை வளாகம் கட்டப்பட்டது. ஷாஜஹான் கம்பீரமான தாஜ்மஹாலில் அடக்கம் செய்யப்பட்டார்.


ஔரங்கசீப் ஆயிரக்கணக்கான இந்து கோவில்களை அழித்தார் என்ற தவறான கருத்து உள்ளது என்கிறார் அவர். அதிகபட்சமாக, சில டஜன் கோவில்கள் மட்டுமே அவரது நேரடி உத்தரவால் இடிக்கப்பட்டன. அவரது ஆட்சியில் இந்து இனப்படுகொலை என்று சொல்லக்கூடிய எதுவும் நடக்கவில்லை. உண்மையில், ஔரங்கசீப் தனது அரசில் இந்துக்களை பல முக்கிய பதவிகளில் அமர்த்தினார் என்கிறார் அவர்.


ஔரங்கசீப்பின் இலக்கிய ஆர்வம்


ஔரங்கசீப் 1618 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி தோஹாத்தில் தனது தாத்தா ஜஹாங்கீர் ஆட்சியின் போது பிறந்தார். அவர் ஷாஜகானின் மூன்றாவது மகன். ஷாஜகானுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் தாய் மும்தாஜ் மஹால் ஆவார். ஔரங்கசீப் இஸ்லாமிய மத இலக்கியங்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல், துருக்கிய இலக்கியங்களையும் படித்தார். எழுதுவதில் தேர்ச்சி பெற்றார். மற்ற முகலாய பேரரசர்களைப் போலவே ஔரங்கசீப்பும் சிறுவயதிலிருந்தே சரளமாக ஹிந்தி பேசினார்.ஷாஜகானின் நான்கு மகன்களும் சிறுவயதிலிருந்தே முகலாய அரியணைக்கு போட்டியிட்டனர். எல்லா மகன்களுக்கும் அரசியல் அதிகாரத்தில் சம உரிமை அளிக்கும் மத்திய ஆசியாவின் வழக்கத்தை முகலாயர்கள் பின்பற்றினர். ஷாஜகான் தனது மூத்த மகன் தாரா ஷிகோவை தனது வாரிசாக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் முகலாய பேரரசின் மிகவும் தகுதியான வாரிசு தான்தான் என்று ஒளரங்கசீப் நினைத்தார்.


தாரா ஷிகோவின் திருமணத்திற்குப் பிறகு, ஷாஜஹான், சுதாகர் மற்றும் சூரத் சுந்தர் என்ற இரண்டு யானைகளுக்கு இடையே சண்டைக்கு ஏற்பாடு செய்ததாக ஆட்ரி ட்ருஷ்கி ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். இது முகலாயர்களின் விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது. திடீரென்று சுதாகர், மிகுந்த ஆக்ரோஷத்துடன் குதிரை மீது அமர்ந்திருந்த ஒளரங்கசீப்பை நோக்கி ஓடியது. ஔரங்கசீப் சுதாகரின் நெற்றியில் ஈட்டியால் தாக்கினார். இது யானைக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.


தாரா ஷிகோவுடன் பகை


யானை, ஒளரங்கசீப் அமர்ந்திருந்த குதிரையை பலமாக தள்ளியது. ஒளரங்கசீப் நிலத்தில் விழுந்துவிட்டார். அவரது சகோதரர் ஷூஜா மற்றும் ராஜா ஜெய் சிங் உட்பட அங்கிருந்தவர்கள் ஔரங்கசீப்பைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் இறுதியில் மற்றொரு யானையான ஷியாம் சுந்தர், சுதாகரை திசைதிருப்பி அதை மீண்டும் சண்டைக்கு இழுத்தது. இச்சம்பவத்தை ஷாஜகானின் அரசவைக் கவிஞர் அபு தாலிப் கான் தனது கவிதைகளில் குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு வரலாற்றாசிரியர் அகில் கான் ரஸி தனது புத்தகமான வக்கியத்-இ-ஆலம்கிரியில், இந்த சம்பவம் நடந்த வேளையில் தாரா ஷிகோ பின்னால் நின்று கொண்டிருந்ததாகவும், ஒளரங்கசீப்பை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் எழுதுகிறார். ஷாஜகானின் அரசவை வரலாற்றாசிரியர்களும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, 1610 ஆம் ஆண்டு ஷாஜகான் தனது தந்தை ஜஹாங்கீரின் முன்னிலையில் ஒரு பயங்கரமான சிங்கத்தைப் பிடித்த சம்பவத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.மற்றொரு வரலாற்றாசிரியர் கேத்தரின் பிரவுன் ' Did Aurangazeb Ban Music?' என்ற தனது கட்டுரையில், ஔரங்கசீப் தனது அத்தையைச் சந்திக்க புர்ஹான்பூருக்குச் சென்றதாகவும், அங்கு அவர் ஹீராபாய் ஜைனாபாதியை பார்த்து மயங்கியதாகவும் எழுதுகிறார். ஹீராபாய் ஒரு பாடகி மற்றும் நடனக் கலைஞர் ஆவார்.


ஹீராபாய் மரத்தில் இருந்து மாம்பழம் பறிப்பதைக் கண்ட ஒளரங்கசீப் அவர் மீது காதல் கொண்டார். மது அருந்த மாட்டேன் என்ற சபதத்தை மீற ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அவருடைய காதல் இருந்தது. ஔரங்கசீப் மதுவை அருந்த முற்பட்டபோது, ​​ஹீராபாய் அவரைத் தடுத்தார். ஆனால் ஒரு வருடம் கழித்து ஹீராபாயின் மரணத்துடன் இந்தக்காதல் கதை முடிவுக்கு வந்தது. ஹீராபாய் ஒளரங்காபாத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.1658 இல், ஔரங்கசீப்பும் அவரது இளைய சகோதரர் முராத்தும், ஆக்ரா கோட்டையை முற்றுகையிட்டனர். அப்போது அவரது தந்தை ஷாஜகான் கோட்டைக்குள் இருந்தார். ஒளரங்கசீப் கோட்டைக்கு தண்ணீர் வருவதை நிறுத்தினர். சில நாட்களில் ஷாஜகான் கோட்டையின் கதவைத் திறந்து, தனது பொக்கிஷங்கள், ஆயுதங்கள் மற்றும் தன்னையும், தனது இரண்டு மகன்களிடம் ஒப்படைத்தார்.


தனது மகளை மத்தியஸ்தராகக் கொண்டு ஷாஜகான், நான்கு சகோதரர்களுக்கும் ஒளரங்கசீப்பின் மூத்த மகன் முகமது சுல்தானுக்கும் இடையில் தனது சாம்ராஜ்யத்தை ஐந்து பகுதிகளாகப் பிரிப்பதற்கான கடைசி யோசனையை முன்வைத்தார். ஆனால் ஒளரங்கசீப் அதை ஏற்கவில்லை.1659 ஆம் ஆண்டு, தாரா ஷிகோ தனது நம்பிக்கைக்குரிய தோழர்களில் ஒருவரான மாலிக் ஜீவனால் கடத்தப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டார். அப்போது ​​ஔரங்கசீப் அவரையும் அவரது 14 வயது மகன் சிஃபிர் ஷுகோவையும் செப்டம்பர் மாத வியர்வை காலத்தில் கந்தல் துணியில் போர்த்தி சிரங்கு நோயால் அவதிப்பட்ட.யானையின் மீது ஏற்றி டெல்லி தெருக்களில் ஊர்வலம் அனுப்பினார்.


வடக்கிற்கு திரும்பாத ஔரங்கசீப்


ஒரு சிப்பாய் தாராவுக்குப் பின்னால் உருவிய வாளுடன் நடந்து கொண்டிருந்தார். அவர் தப்பிக்க முயன்றால், அவரது தலையை கொய்ய ஒளரங்கசீப் உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்தியா வந்திருந்த இத்தாலிய வரலாற்றாசிரியர் நிக்கோலாய் மானுசி, தனது 'ஸ்டோரியா தோ மோகோர்' என்ற புத்தகத்தில், "தாரா இறந்த நாளன்று ஔரங்கசீப் அவரிடம் ஒரு கேள்வியை கேட்டார். நமது பாத்திரங்கள் மாறியிருந்தால் நீ என்ன செய்வாய் என்று கேட்டார். தாரா கேலியாக ," உன் உடலை நான்கு பகுதிகளாக வெட்டி டெல்லியின் நான்கு முக்கிய வாயில்களில் தொங்கவிடுவேன்," என்று பதிலளித்தார்," என எழுதியுள்ளார்..


புது டெல்லியில் உள்ள ஹுமாயூனின் கல்லறை


ஒளரங்கசீப் தனது சகோதரனின் உடலை ஹுமாயூனின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்தார். ஆனால் பின்னர் இதே ஔரங்கசீப் தனது மகள் ஜப்ததுனிசாவை தாரா ஷிகோவின் மகன் சிஃபிர் ஷகோவுக்கு மணம் செய்து கொடுத்தார்.ஔரங்கசீப் தனது தந்தை ஷாஜகானை ஆக்ரா கோட்டையில் ஏழரை ஆண்டுகள் சிறையில் அடைத்தார். அங்கு அவருடன் மூத்த மகள் ஜஹானாரா இருந்தார். ஒளரங்கசீப்பை இந்தியாவின் முறையான ஆட்சியாளராக ஏற்க மெக்காவின் ஷெரீப் மறுத்தார். பல ஆண்டுகளாக ஒளரங்கசீப் அனுப்பிய பரிசுகளையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஒளரங்கசீப்புக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாகும்.


பாபாஜி துன் துன்


ஔரங்கசீப் 1679 இல் டெல்லியை விட்டு தென்னிந்தியாவிற்கு சென்றார். அவர் இறக்கும் வரை வட இந்தியாவிற்கு திரும்பவே இல்லை. இளவரசர் அக்பரைத் தவிர அவரது மகன்கள் மற்றும் அவரது முழு அரண்மனையையும் உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் கொண்ட ஒரு குழு அவருடன் தெற்கே சென்றது.


அவர் இல்லாத நேரத்தில், டெல்லி பாழடைந்த நகரமாக தோன்றத் தொடங்கியது . செங்கோட்டையின் அறைகளில் தூசி படிந்தது. வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு செங்கோட்டையை காட்டுவது நிறுத்தப்பட்டது.ஔரங்கசீப் தனது 'ருகாத்-இ-ஆலம்கிரி' என்ற புத்தகத்தில், தென்னிந்தியாவில் மாம்பழங்களின் குறையை தான் உணர்ந்ததாக எழுதுகிறார். இதை ஜம்ஷித் பில்லிமோரியா மொழிபெயர்த்துள்ளார்.


பாபர் முதல் எல்லா முகலாய மன்னர்களும் மாம்பழங்களை மிகவும் விரும்பினர். வட இந்தியாவில் இருந்து மாம்பழங்களை அனுப்புமாறு ஔரங்கசீப் தனது அரசவையில் அடிக்கடி கேட்டுக்கொண்டதாக ட்ருஷ்கே எழுதுகிறார். சில மாம்பழங்களுக்கு சுதாரஸ், ரஸ்னாபிலாஸ் போன்ற ஹிந்தி பெயர்களையும் அவர் சூட்டினார்.1700 ஆம் ஆண்டில் தனது மகன் ஷஹஸாதே ஆசமுக்கு எழுதிய கடிதத்தில், ஔரங்கசீப் ஆசமின் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்தார். ஆசம், ஔரங்கசீப்பிற்காக 'பாபாஜி துன், துன்' என்ற பாடலை ஊதுகுழலில் இசைத்ததை அவர் குறிப்பிட்டிருந்தார்.


ஒளரங்கசீப்பின் கல்லறை


தனது கடைசி நாட்களில் ஔரங்கசீப் ,இளைய மகன் காம்பக்க்ஷின் தாயார் உதய்புரியுடன் வாழ்ந்தார். உதய்புரி ஒரு பாடகி. ஔரங்கசீப் மரணப்படுக்கையில் இருந்து கம்பக்ஷூக்கு எழுதிய கடிதத்தில், தான் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் உதய்புரி தன்னுடன் தங்கியிருப்பதாகவும், இறப்பிலும் தன்னுடன் அவர் இருப்பார் என்றும் எழுதினார்.ஒளரங்கசீப் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, 1707 கோடையில் உதய்புரியும் காலமானார்.