இந்தியத் தொழிலாளர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது?!

01 May 2022

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம், உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் நேரத்தில், இந்தியத் தொழிலாளர்கள் எத்தகைய சூழலில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.


ஆட்சியாளர்களின் தவறான கொள்கை முடிவுகளாலும், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளாலும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்த இந்தியத் தொழிலாளர்களுக்கு, கொரோனா பெருந்தொற்றும்... ஊரடங்கும் மரண அடி கொடுத்தன.




அப்போது, சாலைவிபத்துகளாலும் பட்டினியாலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தியத் தொழிலாளர்களின் அந்தத் துயரங்கள் விவரிக்க முடியாதவை.


கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களைவிட, வாழ்வாதாரங்களை இழந்ததால் ஏற்பட்ட மரணங்கள் அதிகம் என்பதற்கான பல புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தற்போதைக்கு இந்தியாவில் குறைந்திருக்கிறது என்றாலும், அதன் அச்சுறுத்தல் நீடிக்கவே செய்கிறது என்பதைக் கவலையோடு பார்க்க வேண்டியிருக்கிறது.




சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'உலக சமத்துவமின்மை' யின் ஆய்வறிக்கையில், அதிர்ச்சிக்குரிய பல விவரங்கள் இடம்பெற்றிருந்தன.


'இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கும் மேலான (21.7 சதவிகிதம்) வருமானத்தை மொத்த மக்கள்தொகையில் மேல் மட்டத்திலிருக்கும் ஒரு சதவிகிதம் பேர் பெற்றிருக்கிறார்கள். கீழ்மட்டத்தில் இருக்கும் 50 சதவிகிதம் பேர் வெறும் 13.1 சதவிகித வருமானத்தையே பெற்றிருக்கிறார்கள். அதேபோல, மேல் மட்டத்தில் இருக்கும் 10 சதவிகிதம் பேர் நாட்டின் மொத்த வருமானத்தில் 57 சதவிகிதத்தைப் பெற்றிருக்கிறார்கள்' என்று உலக சமத்துவமின்மை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. வாழ்வா, சாவா என்கிற நிலையில் இந்திய தொழிலாளர்கள் இருப்பதை இத்தகைய ஆய்வறிக்கைகள் மூலமாக உணர முடிகிறது.


கொரோனா பதிப்புகளிலிருந்து தமிழ்நாடு மீண்டுவரும் சூழலில், இந்த ஆண்டின் மே தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் மண்ணில் முதன்முதலாக 1923-ம் ஆண்டு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரால் மே தினம் கொண்டாடப்பட்டது. அன்றைக்கு சென்னை கடற்கரையில் மே தினம் கொண்டாடப்பட்டு, இன்றைக்கு அது நூறு ஆண்டுகளைத் தொடுகிறது


இந்த நிலையில், மே தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வரை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் விடுத்த மே தின வாழ்த்துச் செய்தியில், "சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி - தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.




மேலும், "தி.மு.க ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஓராண்டு நிறைவடைவதற்கு முன்பாகவே, கடை மற்றும் நிறுவனங்களில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பணிபுரியும் இடத்தில் இருக்கை வசதி அளிக்க வேண்டும் என்று 'தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம் 2021' நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்கள் பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே பணி செய்ய வேண்டிய நிலை அகற்றப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 10,17,481 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, 1,85,660 பயனாளிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 247.49 கோடி ரூபாய் கோடி அளவில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது" என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.




ஓராண்டு கால தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் நலன் சார்ந்த அறிவிப்புகள், திட்டங்கள் தி.மு.க-வினரால் பட்டியலிடப்பட்டாலும், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் மலை போல குவிந்துகிடக்கின்றன.கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவித்து, மெல்ல மீண்டுவரும் உழைப்பாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, அவர்களின் வாழ்வு மேம்பட அரசுகள் உதவிட வேண்டும் என்பதே இந்த நாளில் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.