நீலகிரியில் கொட்டிக் தீர்த்த கனமழை: பயிர்கள் நாசம்...

23 July 2021


நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், ஏராளமான மலை காய்கறிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.


நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து உதகை, அவலாஞ்சி, எமரால்டு, இத்தலாறு, நஞ்சநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியது.

இதனைத்தொடர்ந்து கனமழை காரணமாக பாலாட ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால், கரைபுரண்டு ஓடிய நீர் அருகில் இருந்த விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் கப்பதொரை, எம்.பாலாட, கல்லக்கொரை ஆடா, பைகமந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் குளம் போல காட்சி அளித்தன.

இப்பகுதிகளில் விளைவிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் அனைத்தும் வீணானதால், ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.