மேகதாது அணை விவகாரம்: கேரளாவின் ஆதரவை பெற வேண்டும் : பி.ஆர்.பாண்டியன்

23 July 2021


கேரளாவின் ஆதரவை பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வகையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமான பணிக்கு ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு அனுப்பியது. அந்த அறிக்கையை ஜல்சக்தி அமைச்சகம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளது. 

மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை சட்டவிரோதம் என அறிவித்து நிராகரிக்க வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். ஆணைய கூட்டத்தில் விவாதிப்பதற்கு முன்னதாக மேகதாது அணை கட்டப்படுகிறது. இதன் மூலமாக தமிழகத்துக்கு ஏற்பட இருக்கிற பேராபத்தை கேரள அரசிடம் எடுத்துக்கூறி தமிழக நலன் கருதி அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தும் வகையில் ஆணையம் மூலம் திட்ட அறிக்கையை நிராகரிக்க தமிழகத்துக்கு, கேரள அரசு ஆதரவளிக்க வேண்டும் என கேரள முதலமைச்சரிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.

காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதி ரூ.300 கோடியை மத்திய அரசு கட்டாயப்படுத்தி பெற்றுக் கொண்டதாக வெளிவரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிதி முழுவதும் காவிரி டெல்டாவில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தி இருக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு விளக்கம் கோர வேண்டும். நாடாளுமன்றத்தில் இச்செயல் குறித்து விளக்கம் கேட்டு உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் கூறினார்.