உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கட்டுப்படுத்துவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

13 October 2020

ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கட்டுப்படுத்துவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா, எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு சாதமாக இருந்துகொண்டு, தனது அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார். ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலரை நீதிபதி ரமணா கட்டுப்படுத்துவதாக கூறியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, அதற்கு சான்றாக எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய வழக்குகள் சில குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் அமராவதியை தலைநகரமாக்க முயன்ற போது நடைபெற்ற நில அபகரிப்பு ஊழலில், நீதிபதி ரமணாவின் 2 மகள்களுக்கும் தொடர்பு உள்ளது என்றும், இது குறித்து தனது அரசு நடவடிக்கை எடுத்ததால் ஆந்திர உயர்நீதிமன்றங்கள் மூலம் ரமணா அதனை தடுக்க பார்க்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், இதன் காரணமாகவே நில அபகரிப்பு ஊழல் வழக்கு குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இவ்வாறான நேரடி குற்றச்சாட்டை வைத்துள்ளது நீதிமன்ற அரசியல் வட்டாரத்திலும், நீதிமன்றங்கள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.