நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்

16 August 2021


காபூல் நகருக்குள் தலிபான் நுழைந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.


ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை அடுத்து ஆப்கானுக்குள் வந்த அமெரிக்க ராணுவம், கடந்த 20 ஆண்டுகளாக தலிபானுக்கு எதிராகப் போரிட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க ராணுவம் இப்போது வெளியேறி வருகிறது.

இதனால் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்கள், அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலை யில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள்ளும் அவர்கள் நுழைந்துவிட்டனர். இதனால் ஆட்சி அதிகாரத்தை மாற்றும் நிகழ்வுகள் அங்கு அமைதியாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஆப்கான் அரசு, ஆட்சியை தலிபான்களிடம் ஒப்படைக்க இருக்கிறது.

இதையடுத்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தஜிகிஸ்தான் சென்றுள்ளதாகவும் துணை அதிபர் அம்ருல்லாவும் காபூலைவிட்டு வெளியேறி விட்டதாகவும் இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.