நடிகர் விமல் கொடுத்த மோசடி புகார் சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு.

27 August 2021

நடிகர் விமல் கொடுத்த புகாரில் சினிமா தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தயாரிப்பாளரும் பைனான்சியருமான சிங்காரவேலன் உள்ளிட்ட மூவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விமல் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், "கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய 'மன்னர் வகையறா' என்ற படத்தில் நடித்தேன். பண பிரச்னை காரணமாக அந்தப்படத்தை தனது A3v தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டேன். இதற்கு பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோர் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து வந்தனர். அவர்களை நம்பி பல காசோலைகள் மற்றும் ஆவணங்களிலும், கையெழுத்திட்டேன்.இந்நிலையில் படத்தை தயாரிக்க 3 கோடி ரூபாய் செலவானதாகவும், அதனை விற்பனை செய்ததில் 4 கோடி ரூபாய் கிடைத்ததாக சிங்காரவேலன் தெரிவித்தார். அந்த நான்கு கோடி ரூபாய் பணமும் படத்திற்காக கடனாக வாங்கிய 3 கோடி ரூபாய் பணத்திற்கான வட்டிக்காக செலவாகி விட்டதாக சிங்காரவேலன் என்னிடம் தெரிவித்தார். அசல் 3 கோடி பணத்துக்காக எதிர்வரும் காலத்தில் படங்கள் நடித்து சம்பளத்தின் மூலம் கொடுத்தேன். இதனிடையே 'மன்னர் வகையறா' படத்தை விற்பனை செய்ததில் 8 கோடி ரூபாய் கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் என்னை சிங்காரவேலன் மோசடி செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

மேலும் தன் தயாரிப்பு நிறுவனத்தை தவறாக பயன்படுத்தி பல ஆவணங்கள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து வாங்கி பண மோசடி செய்துள்ளனர். தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு உடந்தையாக கோபி மற்றும் விக்னேஷ் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.ஆனால் புகார் மீது விருகம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நடிகர் விமல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவை பெற்றார். அதன்படி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை விருகம்பாக்கம் போலீசார், சிங்காரவேலன், கோபி மற்றும் விக்னேஷ் ஆகிய மூவர் மீது 420- மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.