விஷால் நடிக்கும் 31-வது படம்

04 April 2021

விஷால் நடித்து 2019-ல் அயோக்யா, ஆக்‌ஷன், சக்ரா படங்கள் வந்தன. கொரோனாவால் கடந்த வருடம் அவருக்கு படங்கள் இல்லை, துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட மோதலால் படம் பாதியில் முடங்கி உள்ளது. இந்த படத்தை விஷாலே இயக்கப்போவதாக அறிவித்து உள்ளார். ஆனாலும் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனிமி படத்துக்கு பிறகு விஷால் தனது 31-வது படமாக புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி உள்ளார். விஷாலை வைத்து இவர் இயக்கும் படம் அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன் கதை கருவில் தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.