முதல் உலகப் போர் துவங்கிய நாள் இன்று!!

28 July 2021


ஒடுக்கப்பட்ட மக்களின், விடுதலைக்காக நடைபெறும் போர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, நிலங்களுக்காகவும் ஆட்சி அதிகரங்களுக்காவும் நடைபெறும் போர்கள். தன் நாட்டின் வளத்தைப் பெருக்க, மற்ற நாட்டு மக்களை அடிமைப்படுத்தும் காலனிய ஆட்சி அதிகாரத்தை விரிவாக்க, நடைபெற்ற மிகப்பெரிய போர்களில் ஒன்றுதான், 1914-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி தொடங்கிய முதல் உலகப்போர்.


முதல் உலகப்போர் தொடங்க, முக்கிய காரணமாக இருந்தது, ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் பெட்டினாண்ட் ((Franz Ferdinand ))படுகொலைதான். இதனை நிகழ்த்தியவர் செர்பிய நாட்டைச் சேர்ந்த கவ்ரிலோ பிரன்சிப் ((Gavrilo Princip)) என்பவர். காலனிய நாடுகளை தன் காலடியில் வைத்துக்கொள்ள விரும்பிய ஆஸ்திரிய பேரரசு, இளவரசரின் படுகொலையை காரணம் காட்டி, செர்பியாவின் மீது போரை தொடங்கியது.

நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் போர் 

ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக, ஜெர்மனி, துருக்கி, ஒட்டமான் பேரரசு உள்ளிட்டவை களத்தில் இறங்கின. அதேநேரம் ரஷ்யாவின் எல்லைக்குள் இருந்த, செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, இங்கிலாந்து பேரரசின் கீழ் இருந்த இந்தியா உள்ளிட்ட காலனிய நாடுகளும், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் களமிறங்கின.

குதிரைப்படை, யானைப்படைகளைக் கொண்டு, போர் நடத்திய வீரர்கள், முதன் முதலாக நவீன ஆயுதங்களை பயன்படுத்தி போரிட்டனர். இந்த போரில் முதல் முறையாக விமானம்தாங்கி கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1914 ஜூலை 28-ந் தேதி தொடங்கிய, முதல் உலகப் போர், 1918 நவம்பர் 11-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த போரால் பல நாடுகள் சிதைவுற்றிருந்தன. சில நாடுகள் புதிதாக முளைத்திருந்தன. ஒட்டுமொத்தமாக 97 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடி அப்பாவி மக்களும் உயிரிழந்தனர். ஏறத்தாழ, 15 லட்சம் இந்திய வீரர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களில் 74 ஆயிரம் பேர் பலியாகினர்.

இங்கிலாந்து பேரரசின், காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா, தன் நாட்டு மக்களை போரில் பலகொடுத்தது மட்டுமல்லாமல், நாடும் பெரும் சேதத்தை சந்தித்தது. குறிப்பாக ஜெர்மனியின் "எஸ்.எம்.எஸ். எம்டன்” என்ற நவீன போர்க்கப்பல்,1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை துறைமுகத்தை தாக்கியது. எம்டன் கப்பல் தாக்கிய பகுதி, தற்போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. வெடிக்காமல் இருந்த குண்டு, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தற்போதும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கேப்டன் வான் முல்லர் தலைமையில், வந்த எம்டன் கப்பலில், இங்கிலாந்தின் பிடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்த, ((திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, ))தமிழ் பொறியாளர், செண்பகராமன் என்ற வீரரும் இடம் பெற்றிருந்தார். ஆங்கிலேயப் படைக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய ‘எம்டன்’ கப்பல், 1914-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி, ஆஸ்திரேலியா போர் கப்பலால், சிட்னி துறைமுகம் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது.

மின்னணு சாதனங்கள் ஏதுமில்லாத அந்த காலத்தில், முதல் உலகப்போர் முடிவுக்கு நம்பகமான, தகவல் தொடர்பு சாதனமாக, விளங்கியது கடிதங்கள்தாம். முதல் உலகப்போரை தொடங்கிய ஆஸ்திரியா அரசர் கார்ல், ஜெர்மனிக்கு எழுதிய கடிதத்தில், எங்கள் நாட்டு மக்கள், தொடர்ந்து இந்த போரில் ஈடுபட விரும்பவில்லை, எனது மனசாட்சி கூறுவதை மீறி, தேவையில்லாமல் ரத்தம் சிந்துவைதை நான் குற்றமாகக் கருதுகிறேன் என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதமே போரை நிறுத்த முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால், அடுத்த 15 ஆண்டுகளில் இதைவிட மிகப்பெரும் போரை சந்தித்தது இந்த உலகம்.