கும்பகோணம் தீவிபத்து !!

16 July 2021

2004ஆம் ஆண்டு, ஜுலை 16 ஆம் தேதி. எப்போதும் போலக் காலையில் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு, தங்களின் வழக்கமான வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர் அந்த பெற்றோர். திடீரென ஒரு செய்தி. பள்ளிக்கூடத்தில் தீ விபத்து என்று. செய்து கொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு, பதைபதைப்போடு பள்ளியை நோக்கி ஓட ஆரம்பித்தனர். "சிறிய தீ விபத்தாகத் தான் இருக்கும்..என் பிள்ளைக்கு


எதுவும் ஆகியிருக்காது” என்று மனதை தேற்றிக்கொண்டு பள்ளியை அடைந்த பெற்றோருக்கு, காத்திருந்தது பேரதிர்ச்சி. வெகுதூரம் நிற்போரையும் காணல் சுடும் அளவிற்கு, பள்ளியின் மேற்கூரை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

கும்பகோணம் காசிராமன் தெருவில், ஸ்ரீகிருஷ்ணா என்கிற பெயரில் அரசு உதவிப் பெரும் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. ஒரே கட்டிடத்தில் மூன்றுப் பள்ளிகள் அந்த வளாகத்தில் இயங்கி வந்தன. பள்ளியின் சமையலறையும் வளாகத்தினுள்ளேயே அமைக்கப்பட்டிருந்தது. இந்த சமையலறையில் ஆரம்பித்த தீ தான், மளமளவெனக் கட்டிடம் முழுவதும் பரவியது. தீ தங்களை நெருங்குவதை உணர்ந்த மழலைகள் ‘எங்களைப் பெற்றோரும் ஆசிரியரும் எப்படியேனும் காப்பற்றிவிடுவார்கள்’ என்ற நம்பிக்கையில் இருக்க, கதரி அழுத கண்ணீர் தரையில் படும் முன்னே நீராவியாய் போக, அந்த பிஞ்சு குழந்தைகள் தீக்கு இரையாகினர். ’என் குழந்தை எங்கே’ என்று தேடித்தவித்த பெற்றோருக்கோ, இதுதான் தன் குழந்தை என அடையாளம் தெரியாத அளவு பிஞ்சு உடல்கள் தீயில் கருகியிருந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல, 94 குழந்தைகள் அத்தீயில் கருகி இறந்தது அன்று தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இத்தீவிபத்தைப் பற்றி விசாரிக்க 2004ஆம் ஆண்டு சம்பத் கமிஷன் அமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இந்த ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதியை உரிய அலுவலரிடம் முறையாகப் பெற வேண்டும், பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைக்குச் செல்லும் வழி மூடப்பட்டிருக்க வேண்டும், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும், ஆபத்துக் காலங்களில் முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும், வசதிகள் அனைத்தும் முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஆய்வு செய்யலாம், போன்றவற்றை உள்ளடக்கிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.1 லட்சம் கருணைத் தொகையாகவும் கடுமையாகக் காயமுற்றோருக்கு தலா ரூ.25,000மும், லேசாகக் காயமுற்றவர்களுக்கு தலா ரூ.10,000 இழப்பீடாக வழங்கப்பட்டன. தீ விபத்து தொடர்பான வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு 2006 ஜூலை 12ல் மாற்றப்பட்டது. பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்த லெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பொறியாளர், போன்றோருக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டன.

அபராதத் தொகையிலிருந்து இறந்த குழந்தைகள் குடும்பத்தினர், காயமடைந்த குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனையை எதிர்த்து பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான பழனிச்சாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை மாற்றி அமைக்கப்பட்டு, அவர் இதுவரை சிறையில் அனுபவித்த தண்டனைக் காலம் போதுமானது என்றும், சமையலர் வசந்திக்குக் கீழ் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது, எனவே அவரும் சிறையிலிருந்த தண்டனைக் காலம் போதுமானது என்றும், மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், கீழமை நீதிமன்றம் விடுவித்த 11 பேரின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்து, தீர்ப்பளித்தது.

”எங்களுக்குக் குழந்தைகளை இழந்த வலியைவிட இந்த தீர்ப்பின் வலியே இன்றும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது” என்று கலங்குகின்றனர் தங்கள் குழந்தையை தீ விபத்தில் இழந்த பெற்றோரில் ஒருவர். ”கும்பகோணம் தீ விபத்து” எனக் குறிப்பிடப்படும் இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் அது ஆறா வடுவாகவே உள்ளது. இன்றும், பள்ளியின் முன் வைக்கப்படும் இறந்த குழந்தைகளின் புகைப்படத்திற்கும், காவிரியின் தென்கரையில் உருவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் நினைவிடத்திற்கும் பெற்றோர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

17ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் தமிழ்நாட்டில் பல பள்ளிகள் முழு தரத்தையும் பாதுகாப்பையும் அளிக்காத நிலையே உள்ளது என்பதே பலரது குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. இணைய வசதி, கணினி வசதி, ஆன்லைன் கல்வி படிப்பதில் சிக்கல், மழைக்காலத்தில் ஒழுகும் கூறைகள், பள்ளிக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாதது என எண்ணற்ற கல்வி சார்ந்த தேவைகள் இன்றளவும் இருந்து வருகிறது. இவை அனைத்தையும் பூர்த்தி செய்வதும், இனி கும்பகோணம் தீ விபத்து போன்ற மேலும் ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் ஏற்படாமல் இருக்க, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதுமே அரசின் தலையாய கடமையாகிறது எனக் கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட பெற்றோர் பலர்.