திருவாரூர் அருகே முதலமைச்சர் பாட்டியின் நினைவிடமான காட்டூரில் கொரோனா தடுப்பூசி 100-சதவீத இலக்கை அடைந்தது!

25 June 2021



திருவாரூர் அருகே முதலமைச்சர் பாட்டியின் நினைவிடமான காட்டூரில் கொரோனா தடுப்பூசி 100-சதவீத இலக்கை அடைந்ததையடுத்து ஊராட்சி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவாரூர் உள்பட 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பாதிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியம் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் முதலில் ஒருவித அச்சத்தின் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்வதை மக்கள் தவிர்த்தனர்.

தற்போது கொரோனா 2-வது அலையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாலும், அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாலும் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி அவசியம் என்பதை உணர்ந்து மக்கள் ஆர்வத்துடன் ஊசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் 100-சதவீதம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஆவதற்கு மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கே. கலைவாணன் எம்.எல்.ஏ. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி ஆங்காங்கே கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் அமைத்து மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தாயாரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர்களின் பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடம் அமைந்துள்ள காட்டூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் அனைத்து மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனால் காட்டூர் ஊராட்சி 100-சதவீத இலக்கை அடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகழ்ச்சியடைந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். காட்டூர், பவித்திரமாணிக்கம், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த முகாம்களை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும், தி.மு.க.ஒன்றிய செயலாளருமான சேகர் என்கிற ஆர்.கலியபெருமாள் கண்காணித்து வருகிறார். 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் கொரோனா தடுப்பூசி தேவைக்கு ஏற்ப கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிற தடுப்பூசி மருந்துகளை கொண்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாம்களில் அந்த பகுதி மக்களின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்து இல்லாததால், முன் கூட்டியே ஊசிக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்பட்டு மற்றவர்களுக்கு ஊசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் போதிய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனவும், ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போடும் முகாம் குறித்து முன்கூட்டிய அறிவிப்பு செய்து அனைவரும் பயன் அடைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.