அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர்கள் இல்லாத நிலை, விழுப்புரம் காணை ஒன்றியம்
13 December 2025
காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவ சேவை இல்லை
பொதுமக்கள் கடும் புகார்
காணை, டிச.13—
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் காணை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவரும், செவிலியர்களும் பணியில் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சுகாதார நிலையத்தில் பிரசவ சேவை வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், அவசர காலங்களில் குறிப்பாக இரவு நேரங்களில் மருத்துவர் கிடைக்காத நிலை இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திடீரென விஷ பூச்சிகள் கடித்தல் உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றால், அங்குள்ள பணியாளர்கள் மரியாதையின்றி பேசுவதாகவும், செவிலியர்களும் மருத்துவரும் நோயாளிகளை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும், பிரசவ சேவைக்கு அவசியமான செவிலியர்கள் மருத்துவமனையில் முறையாக பணியில் இல்லை என்றும், மருத்துவர் மருத்துவமனை அருகில் கூட தங்குவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அடையாள உடை (யூனிஃபாரம்) இருப்பினும், காணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுவோர் கலர் உடையில் இருப்பதால் யார் செவிலியர் என்பது கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகையால் காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்யவும், பணியாளர்களின் ஒழுங்கீன செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத் துறை உடனடியாக தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---PS Parthi