திமுகவை வீழ்த்தும் பணியில் விஜய் கவனம் செலுத்தட்டும்: டிடிவி
03 February 2026
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் ஒருபுறம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவைத் தனது முன்மாதிரிகள் என்று கூறிக்கொண்டு, மறுபுறம் அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிப்பது முரண்பாடாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தங்களின் ஒரே எதிரி திமுகதான் என்றும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் விளக்கினார். மேலும், இது தேர்தலுக்கான கூட்டணி மட்டுமல்ல, கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருமித்த லட்சியத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும், கடந்த காலத் தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது வலிமையுடன் இணைந்திருப்பதாகவும் தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.