ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: திமுக அரசை விஜய் கடுமையாக விமர்சனம்

04 February 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழக அரசு மற்றும் திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, குவாரி தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரத்தை சுட்டிக்காட்டி விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகவியலாளர்கள் மீது மக்கள் பிரதிநிதி ஒருவரே பொதுவெளியில் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது என்றும், இது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்து பல நாட்களாகியும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை எவ்வித கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று கூறிய விஜய், உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாகவும், மக்களின் துயரத்தைப் போக்காமல் அரசு உறக்க நிலையில் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இத்தகைய ஆட்சிப் போக்கை வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் தூக்கி எறிவது உறுதி என தனது அறிக்கையில் விஜய் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.