திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்போற்சவம்: பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை
03 February 2026
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற தெப்போற்சவம், இந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கி மார்ச் 2-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. கோவில் அருகில் உள்ள சுவாமி புஷ்கரணியில் நாள்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை இந்த உற்சவம் நடைபெறும். முதல் நாளில் சீதா, ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோரும், இரண்டாம் நாளில் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ருக்மிணி தேவியும் தெப்பத்தில் பவனி வருகின்றனர். கடைசி மூன்று நாட்களில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சஹஸ்ர தீபாலங்கார சேவையும், பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட சேவைகளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.