திருப்பதி தெப்போற்சவம்: ஸ்ரீதேவி பூதேவியுடன் கல்யாண வெங்கடேஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து அருள்பாலிப்பு
29 January 2026
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் கடந்த ஜனவரி 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த வைபவத்தில், சுவாமி திருக்குளத்தில் வலம் வந்து தெய்வீகத் தரிசனம் அளித்தார். முன்னதாக முதல் நாளில் கோதண்டராம சுவாமியும், இரண்டாம் நாளில் பார்த்தசாரதி சுவாமியும் தெப்பத்தில் உலா வந்த நிலையில், மூன்றாம் நாள் நிகழ்வில் திருமலை ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தெப்ப உற்சவத்தை தொடர்ந்து சுவாமி மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.