தைப்பூசம்: பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்

01 February 2026

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோவை மருதமலை முருகன் கோவிலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய மின்தூக்கி (லிப்ட்) வசதியைத் தொடங்கி வைத்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் மற்றும் முக்கிய கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாகவும், பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், மருதமலையில் தொடங்கப்பட்டுள்ள மின்தூக்கியில் ஒரே நேரத்தில் 40 பேர் வரை செல்ல முடியும் என்றும், இதேபோன்ற தானியங்கி மின்தூக்கி வசதி சுவாமிமலை கோவிலில் வரும் பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 109 புதிய ராஜகோபுரங்கள் கட்டும் பணிகள் மற்றும் 351 கோவில்களில் மராமரத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.