காட்டுமன்னார்கோவில் அருகே மா.அரசூர் பகுதி கொள்ளிடக்கரை சாலை உள்வாங்கி விரிசல் ஏற்பட்டு வரும் வேதனை
09 December 2025
காட்டுமன்னார்கோவில் அருகே மா.அரசூர் பகுதி கொள்ளிடக்கரை சாலை உள்வாங்கி விரிசல் ஏற்பட்டு வரும் வேதனை
சமீபத்தில் சுமார் 62 கோடியில் அமைக்கப்பட்ட சாலையின் அவலட்சணம் இதுதானா? என கிராமமக்கள், வாகனஓட்டிகள் வேதனையோடு கேள்வி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மா.அரசூர் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்தின் வழியாக செல்லும் கொள்ளிடக்கரை சாலை இப்பகுதியில் உள்ள 30க்குமேற்பட்ட கிராமமக்களின் போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலை கீழணை பகுதியில் இருந்து தொடங்கி சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று வல்லம்படுகை பகுதியில் இணைப்பதாக உள்ளது.
இதன் வழியாக சிதம்பரம்,காட்டுமன்னார்கோவில்,குமராட்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் சாலையாக உள்ளது.இந்நிலையில் தற்போது சாலை சேதமடைந்துள்ளது. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சாலையில் பாதி அளவில் விரிசல் ஏற்பட்டு சரிந்து கொள்ளிடம் ஆற்றுப்பக்கமாக உள்வாங்கியுள்ளது. ஆற்றுக்கும் சாலைக்கும் இடையே இருபதடி பள்ளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் கிராமங்களுக்கு அவசர கால வாகனங்கள் வரமுடியாத நிலையும் இருக்கிறது. இந்தக் கொள்ளிடக்கரை சாலை சமீபத்தில் சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை என்பது குறிப்பிடத்தக்கது. விரிசல் ஏற்படும் பகுதியில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்துவிட்டு சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்த நிலையிலும், அரசின் மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் சாலை அமைத்தவர்கள் என அனைவருமே இதனை கேட்கவில்லை. தங்கள் இஷ்டம் போல சாலை அமைத்து உள்ளனர். தற்போது இப்பகுதியில் மழையும் பெய்து வருவதால் மேலும் அதிக அளவில் சாலை சேதம் ஏற்பட்டு வருகிறது சாலை முழுமையாக துண்டிப்பு ஏற்படும் முன் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு உடைப்பு ஏற்படாதவாறு கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்து விட்டு சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேதனையோடு கோரிக்கையாக உள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து இதுபோன்று பாதிப்பு ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் சென்ற தண்ணீர் உடைப்பு ஏற்பட்டு இவ்விடத்தில் கிராமங்கள் வயல்களில் புகுந்து பாதிப்பு ஏற்படுத்திய பகுதி எனவும் இப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனர். அதனால் குறிப்பிட்ட இவ்விடத்தில் அதிக பாதுகாப்பு அம்சத்தோடு சாலை அமைக்கவேண்டும் .இல்லையேல் இவ்விடத்தில் இதுபோன்றுதான் பாதி்ப்பு ஏற்படும் என இங்குள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்த கொள்ளிடக்கரை சாலை என்பது இப்பகுதியில் உள்ள கிராமமக்களின் வாழ்வாதாரத்தோடு இணைந்தது எனவும், இதற்கு மாற்று வழி இல்லாமல் இருப்பதால் இதனை உடனடியாக சரிசெய்யவேண்டும் எனவும் அவர்கள் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர்
கொற்றவை செய்திகளுக்காக செய்தியாளர் ராஜ்திளக்