மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

06 January 2026

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

​திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற அனுமதி அளித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

​இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து மொத்தம் 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து விசாரித்து வந்தது.


​அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று இறுதித் தீர்ப்பை வழங்கினர்.


தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், அதன்படி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்றும் நீதிமன்றம் உறுதி செய்தது.


"அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படக் கூடாது. பொது அமைதிக்குப் பிரச்சனை ஏற்படும் என்று அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல," என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் சுட்டிக்காட்டினர்.