சுங்கச்சாவடி நிறுவனங்களின் தொழிலாளர் விரத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் தொல் திருமாவளவன் பேட்டி

31 October 2022

சுங்கச்சாவடி நிறுவனங்களின் தொழிலாளர் விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் தொல் திருமாவளவன் பேட்டி...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடி மையங்களில் பணியாற்றிய 56 தொழிலாளர்கள் சட்ட விரோதமாக முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சுங்க சாவடி தொழிலாளர்கள் கடந்த 30 நாட்களாக பல கட்ட போராட்டங்களையும் உள்ளிருப்பு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்
உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பணி நீக்கம் குறித்த தகவல்களையும் போராட்ட சம்பந்தமான தகவல்களையும் தொழிலாளர்கள் மற்றும் டோல்வே நிறுவனத்தின் பேச்சு வார்த்தைகள் குறித்தும் கேட்டறிந்து இதுகுறித்து தமிழக முதல்வர்மற்றும் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோரிடமும் இது குறித்து பேசுவதாக தெரிவித்தார் அவர்களுடைய போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவித்தார்... 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்...

திருச்சி டோல்வேஸ் என்னும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் பணியாளர்கள் 56 பேர் திடுமென பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் பணிநீக்கம் மேற்கொண்டிருப்பது தொழிலாளர் சட்டங்களுக்கு முரணானது. பாதிக்கப்பட்ட சுங்கச்சாவடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஒரு மாத காலமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பணியில் இருக்கும் சுங்கச்சாவடி பணியாளர்களும் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைக்கு வலுசேர்த்து வருகின்றனர். 

தமிழக அரசு இதில் தலையிட வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

சுங்கச்சாவடி தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். சுங்கச்சாவடி இருக்கும் வரையில் அவர்கள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும். ஆகவே, வரட்டு பிடிவாதம் செய்யாமல் இந்த ஒப்பந்தத்தை எடுத்து பணி செய்து கொண்டிருக்கிற  திருச்சி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்துகிறேன். 

விரைவில் மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்வோம். இவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

திருமாந்துறையில் புதிதாக ஆட்களை நியமனம் செய்து ஏற்கனவே பணியாற்றி கொண்டிருந்தவர்கள் அதனை தடுக்க முயற்சிக்கும் போது அவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று இந்த நிறுவனம் குற்றம் சுமத்த பார்க்கிறது. அதுபோல செங்குறிச்சி சுங்க சாவடியிலும் பணியாற்றியவர்களை வெளியேற்றிவிட்டு புதிதாக ஆட்களை மேலும் நியமனம் செய்து பணியாற்ற வைக்கிற முயற்சி நடக்கிறது.13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு செய்கிற மாபெரும் துரோகம் இது.

இந்த நிறுவனம் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மூன்றாம் தேதி புதுதில்லி செல்லும் போது இந்திய ஒன்றிய அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக முறையிடுவேன். 

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து பணிகளுக்குமே இப்போது வடஇந்திய மாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்கிற போக்கு அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல் வந்தவர்கள் அப்படியே இங்கு தங்கிவிடுகிறார்கள் அவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்குவது மட்டுமல்லாமல் வாக்காளர் அட்டையும் வழங்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இது தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் இது  கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்வடஇந்திய மாநிலங்களில் இருந்து இதுபோன்ற பணியாட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும்
தெரிவித்தார்.... 

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் மற்றும் சப் எடிட்டர்