திருவாரூர் அருகே உச்சுவாடி சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூராக கருவேல மரகாடு அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை!

06 July 2021


திருவாரூர் அருகே உச்சுவாடி சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள கருவேல மரகாடுகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் உச்சுவாடி பொன்னியம்மன் கோவில் சாலையிலிருந்து, வடவேற்குடி செல்லும் சாலையில், பிள்ளையார் குளம் அருகில் சாலையின் இரண்டு பக்கமும் அடர்ந்த கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது.

இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், அருகில் உள்ள பள்ளிகளுக்கு இந்த சாலையில் மாணவ- மாணவிகள் சென்று வருகின்றனர்.

இந்த கருவேல மரங்கள் காடுபோல் வளர்ந்துள்ளதால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சாலை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மேலும் எதிர் எதிரே வாகனங்கள் வரும் போது வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

 குறிப்பாக பள்ளி மாணவிகள் இந்த சாலையை கடந்து செல்லும் போது மிகவும் அவதிப்படுகிறார்கள். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் மற்றும் அவ்வழியே செல்லும் பொது மக்கள் அடர்ந்த காட்டுப் பகுதியை கண்டு அஞ்சுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே ஏதேனும் விபத்துகள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சாலையில் காடுபோல் வளர்ந்து அடர்ந்து காணப்படும் இந்த கருவேல மரங்களை வெட்டி அப்புறபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?

நிருபர் மீனா திருவாரூர்