வலிய யாளி... வரம்அருள் நந்தி... ஏழாம்நாள் உலா

10 April 2022

மணவாழ்வு பெற மாலை புறப்பாடு உண்டு. இல்லறம் பெறுமுன் அல்லவை தொலைய வேண்டும் அல்லவா? 'நான்' எனும் ஆணவம் அகல காலையில் பிச்சாடனர் கோலத்தில் பெருமான் வருவார்.

பக்தர்களின் அடியவர்களின் வீண் பீடு எனும் கர்வத்தை பலியாக்க அவரவர் ஆணவத்தை பிச்சைபெரும் பிச்சாடனராய் எம்பெருமான்.அல்லவையான ஆணவம் போனதும் இல்லற வரம் தரும் ஈசன். நந்திகேஸ்வரர் யாளி வாகனங்கள். நந்தியம்பெருமான் கயிலாயத்தில் ஈசனோடு இருப்பவர். மண வரம்தர வல்லவர். ஈசனது இந்தத் திருக்காட்சி விருத்திக்கிரம சங்காரக் கோலம்.அகண்ட முகம், சிலிர்த்த பிடரி, துருத்திப் பிதுங்கும் விழிகள், நீள்துதிக்கை, பறக்க விரித்த இறக்கை, உறுதியான கால்கள், உயர்த்திய வால் பிரமாண்ட யாளி, வலிமையின் அடையாளம்.இத்தனை பெருமைமிக்க ஈசன், அன்னை ஆலயம் மதுரை நகரில் மட்டுமல்ல. திருமங்கலம், கோச்சடை, துவரிமான், வாடிப்பட்டி என சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீனாட்சி கோயில்கள் உண்டு.கோயில் மட்டுமல்ல, ஊர்களும் அன்னை ஈசன் பெயர்தாங்கி உள்ளனவே. வைகையின் தென்கரை பகுதி காடுகளாக இருந்தது. பின்னாளில் அங்கு அன்னை தரிசனம் தர, அங்கு ஊர்களும் கோயில்களும் உருவாகின.இன்றைக்கும் அச்சன்பத்து, பிராட்டிபத்து ஊர்கள் காளவாசலையடுத்து தேனி சாலையில் உள்ளன. அச்சன் என்பது ஐயன் ஈசனைக் குறிக்கும். அச்சம்பத்து என்பது வழக்குமொழி இன்று. பிராட்டி என்பது மீனாட்சியைக் குறிக்கும். விராட்டிப்பத்து என்பது வழக்குமொழி.மீனாட்சிக்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்த ஊர், திருமங்கலம் எனவும் அன்னையின் கண்களுக்கு தீட்ட மைகொடுத்த ஊர், மதுரையில் இன்றும் உள்ள மையிட்டான்பட்டி எனவும் கூறப்படுகிறது.ஆனால் இவைகுறித்து பட்டர்களிடம் கேட்டபோது, நூற்றாண்டுகளுக்குமுன் இருந்திருக்கலாம். அதற்கான பதிவு இல்லை. அதேபோல அந்த வழக்கங்கள் எதுவும் இப்போது பின்பற்றப்படுவது கிடையாது என்றனர்.திருக்கல்யாணத்திற்காக எதுவும் வெளியில் இருந்து கோயிலுக்கு வருவதில்லை. அன்னையின் திருமாங்கல்யம் ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமாக உள்ளதுதான் என்றார்.ஏழாம் நாளோடு திருக்கல்யாணக் களை கட்டத் தொடங்குகிறது கடம்பவன நகரம். திருத்தேர் அலங்காரத் துணிகள் கட்டுவது தீவிரம் எடுக்கிறது. மண்ணரசி மீனாட்சி... ஆடி வரை இனி இவள் ஆட்சி!