காந்தியை கொன்ற கோட்சே பற்றி விலகாத மர்மங்கள் - ஓர் அலசல்

24 January 2022

நாதுராம் கோட்சே உயர்நிலைப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல்காரராகப் பணிபுரிந்தார். 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய தலைவர் ​​மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வெளியே வந்தபோது, வந்தபோது அவரை நாதுராம் விநாயக் கோட்சே சுட்டுக் கொன்றார்.

38 வயதான அவர் ஒரு வலதுசாரி கட்சியான இந்து மகாசபாவில் உறுப்பினராக இருந்தார்.முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தானின் மீது மென்மையாகவும் நடந்து கொண்டதன் மூலம் காந்தி இந்துக்களுக்கு துரோகம் இழைத்ததாக இந்து மகாசபை குற்றம்சாட்டியது.1947இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் உருவாக்கப்பட்ட பிரிவினைக்காக ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கும் காந்தியே காரணம் என்று அந்த கட்சியினர் குற்றம்சாட்டினார்கள்.காந்தி படுகொலை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு ஒரு விசாரணை நீதிமன்றம் கோட்சேவுக்கு மரண தண்டனை விதித்தது.1949ஆம் ஆண்டு நவம்பரில் அந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்டார். (அவரது கூட்டாளியான நாராயண் ஆப்தேவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


இவர்களுடன் தொடர்புடைய மேலும் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது).இந்து மகாசபாவில் சேருவதற்கு முன்பு, கோட்சே இந்தியாவில் தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கருத்தியல் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (தேசிய தொண்டர் அமைப்பு) என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தார்.95 ஆண்டுகள் பழமையான அந்த இந்து தேசியவாத அமைப்பின் நீண்டகால உறுப்பினராக இருப்பவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. அவரது அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆர்.எஸ்.எஸ் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்துவதாக ஒரு கருத்து உள்ளது."தேசத்தின் தந்தை" என இந்தியர்களால் விரும்பி அழைக்கப்படும் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை ஒரு தனி அடையாளத்துடனேயே ஆர்எஸ்எஸ் வருணித்து வருகிறது.


ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்து வலதுசாரிகளின் ஒரு குழு கோட்சேவை மிகப்பெரிய நபராக உருவகப்படுத்தி காந்தியின் கொலையை வெளிப்படையாகவே கொண்டாடி வருகிறது.கடந்த ஆண்டு பாஜக எம்பி ஒருவர் கோட்சேவை "தேசபக்தர்" என்று வர்ணித்தார். ஆனால், அந்த போக்கு பெரும்பாலான இந்தியர்களை கோபப்படுத்தியுள்ளது.காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி டெல்லியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.கோட்சே காந்தியைக் கொல்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தங்களுடைய அமைப்பை விட்டு வெளியேறினார் என்று அந்த அமைப்பு எப்போதுமே கூறி வருகிறது.


ஆனால், அந்தக் கூற்று முற்றிலும் உண்மை இல்லை என்று சமீபத்தில் வெளிவந்த புதிய புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.உயர்நிலைப் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய கோட்சே கூச்ச சுபாவமுள்ளவர். இந்து மகாசபையில் சேருவதற்கு முன்பு அவர் தையல்காரராகப் பணிபுரிந்து வந்தார். பிறகு பழ வியாபாரம் செய்தார். அதைத்தொடர்ந்து இந்து மகா சபையில் சேர்ந்து அதன் நாளிதழின் பத்திகளை சரிபார்க்கும் வேலையை செய்து வந்தார். வழக்கு விசாரணையின் போது, ​​நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 150 பத்திகளை படிக்க அவர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் அந்த புத்தகம் கூறுகிறது.காந்தியைக் கொல்லும் செயலில் "எந்த உள்நோக்க சதியும் இல்லை" என்று அவர் கூறினார்.


அதனால் தமது கூட்டாளிகள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.இந்துத்துவம் அல்லது இந்துமயம் என்ற கருத்தியலை தோற்றுவித்த தனது தலைவரான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வழிகாட்டுதலின் கீழ் தான் காந்தியை கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கோட்சே நிராகரித்தார். (எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் சாவர்க்கர் விடுவிக்கப்பட்டாலும், காந்தியை வெறுத்த அந்த தீவிர வலதுசாரி தலைவருக்கு இந்தப் படுகொலையில் தொடர்பு இருந்ததாகவே விமர்சகர்கள் நம்புகிறார்கள்.)காந்தியைக் கொல்வதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ் உடனான உறவை முறித்துக் கொண்டு விட்டதாகவும் கோட்சே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


ஆனால், காந்தியின் படுகொலை பற்றிய புத்தகத்தை எழுதிய நூலாசிரியர் திரேந்திர ஜா, ஒரு தபால் ஊழியரின் மகனும் வீட்டை கவனித்து வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்த கோட்சே, ஆர்எஸ்எஸ்ஸின் "முக்கியமான உறுப்பினர்" என்று எழுதியுருக்கிறார்.ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து கோட்சே நீக்கப்பட்டதற்கான "ஆதாரம்" இல்லை என்று அவர் பதிவு செய்துள்ளார்.வழக்கு விசாரணைக்கு முன் பதிவு செய்யப்பட்ட கோட்சேவின் வாக்குமூலத்தில், "ஹிந்து மகாசபாவில் உறுப்பினரான பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து விலகியதாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை" என்று திரேந்திர ஜா கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் கோட்சே அளித்த வாக்குமூலத்தில், ஆர்எஸ்எஸ்ஸை விட்டு வெளியேறிய பிறகு இந்து மகாசபையில் சேர்ந்ததாக கூறியுள்ள அவர், எப்போது அதைச் செய்தார் என்பது குறித்து அமைதி காத்தார் என்று திரேந்திரா குறிப்பிட்டுள்ளார்."இது கோட்சேவின் வாழ்க்கையின் மிகவும் விவாதிக்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக இருக்கும் ஒரு கூற்று" என்கிறார் திரேந்திர ஜா."ஆர்.எஸ்.எஸ்-சார்பு எழுத்தாளர்கள்" இதைப் பயன்படுத்தி, "காந்தியைக் கொல்வதற்கு ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்பே கோட்சே ஆர்.எஸ்.எஸ் உடனான உறவை முறித்துக் கொண்டு இந்து மகாசபையில் சேர்ந்தார் என்ற கருத்தை அமைதியாக புறந்தள்ளினார்கள்" என திரேந்திர ஜா நம்புகிறார்.

அமெரிக்க ஆராய்ச்சியாளரான ஜேஏ குர்ரன் ஜூனியர், "1930இல் கோட்சே ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்தார் என்றும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதில் இருந்து அவர் விலகினார் என்றும் கூறியுள்ளார்.ஆனால் அவரது கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஜா தமது புத்தகத்தில் எழுதியுள்ளார்.காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையின்போது அளித்த வாக்குமூலத்தில், கோட்சே இரண்டு அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் வேலை செய்ததாக கூறியிருக்கிறார்.


இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தில் கோட்சேவின் குடும்பத்தினரும் தீவிரமாக பங்கெடுத்தனர். 2005இல் இறந்த நாதுராமின் சகோதரர் கோபால் கோட்சே வாழ்ந்த காலத்தில் தனது சகோதரர் "ஆர்எஸ்எஸ்ஸை விட்டு வெளியேறவில்லை" என்று கூறியிருந்தார். இதேபோல, கோட்சேவின் மருமகன் ஒருவர் 2015இல் ஒரு பத்திரிக்கையாளரிடம் பேசும்போது, கோட்சே 1932இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தார். அந்த இயக்கத்தில் இருந்து அவர் "வெளியேறவில்லை" என்று கூறினார்.இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்டகால பற்றாளர்.ஆவண காப்பகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த விவரங்களை மிக ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்திய திரேந்திர ஜா அதன் சில கண்டுபிடிப்புகளை தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.


கோட்சேவுக்கும் இரண்டு இந்து அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றியும் அவர் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்து மகாசபாவும் ஆர்எஸ்எஸ்ஸும் "நீரில் பின்னிப்பிணைந்த திரவம் போன்ற உறவை" கொண்டிருந்தன. அவை ஒரே மாதிரியான சித்தாந்தத்தைக் கொண்டிருந்தன என்று அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார்.காந்தி கொல்லப்படும் வரை இந்த இரு அமைப்புகளும் "எப்போதும் நெருங்கிய தொடர்புகள் மற்றும் சில சமயங்களில் அதன் உறுப்பினர்கள் இரண்டுக்கும் சேர்த்து வேலை செய்தனர்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


(காந்தி கொலை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அப்போதைய அரசு தடை விதித்தது.)1930களின் மத்தியில் அந்த அமைப்பை விட்டு கோட்சே வெளியேறினார் என்று அவரே கூறியதைத்தான் ஆர்.எஸ்.எஸ் எப்போதும் எதிரொலித்தது. மேலும் இந்த கொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கோட்சேவின் வாக்குமூலமே நிரூபிக்கிறது என்கிறது ஆர்எஸ்எஸ். கோட்சேவை ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று கூறுவது அரசியல் நோக்கத்திற்காக பொய்யை மட்டுமே முன்னிறுத்தும் செயல் என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ராம் மாதவ் கூறியுள்ளார்.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான எம்.எஸ்.கோல்வால்கர், காந்தியின் படுகொலையை "அளவிட முடியாத சோகம் - அதற்கு காரணம் அந்த மோசமான மேதை இந்திய நாட்டவர் மற்றும் அவர் ஒரு இந்து" என்று அழைத்தார்.


மிக சமீப காலத்தில், எம்.ஜி. வைத்யா போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கோட்சேவை "கொலைகாரன்" என்று அழைத்தனர், அவர் இந்தியாவின் மரியாதைக்குரிய நபரைக் கொன்றதன் மூலம் இந்துத்துவாவை "அவமதித்தார்" என்று கூறினார்.விக்ரம் சம்பத் போன்ற எழுத்தாளர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபைக்கு இடையிலான உறவு ஒரு புயல் போல இருந்ததாக நம்புகிறார்கள். சாவர்க்கரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை இரண்டு தொகுதிகளாக எழுதிய சம்பத், "இந்துக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக" ஒரு "புரட்சிகர ரகசிய சங்கம்" போன்ற தன்னார்வத் தொண்டர்கள் குழுவை அமைப்பது என்ற இந்து மகாசபையின் முடிவு, ஆர்எஸ்எஸ் உடனான உறவில் கசப்புணர்வை ஏற்படுத்தியது," என்று கூறியுள்ளார்.


மேலும், சம்பத்தின் கூற்றுப்படி, இந்து மகாசபா தலைவர் சாவர்க்கரைப் போலல்லாமல் தனிநபர்களை சிலை வடிவில் வழிபாடு செய்யும் போக்கில் இருந்து ஆர்எஸ்எஸ் தள்ளியே இருந்தது. RSS: A View to the Inside, என்ற புத்தகத்தில் காந்தியின் கொலையில் ஆர்எஸ்எஸ் எவ்வாறு "முன்னாள் உறுப்பினர் (நாதுராம் கோட்சே) ஈடுபாட்டுடன் இருந்தது" மற்றும் அதன் பாசிச, எதேச்சதிகார மற்றும் இருட்டடிப்பு செய்யப்பட்டது போன்றவை குறித்து எழுத்தாளர்கள் வால்ட்டர் கே. ஆண்டர்சன், ஸ்ரீதர் டி டாம்ளே பேசியுள்ளனர்.இருந்தாலும் கூட, கோட்சே ஆர்எஸ்எஸ்ஸின் ஒரு பகுதியாக இருந்தார், அவர் ஒருபோதும் வெளியேறவில்லை என்ற சந்தேகங்கள் எந்த காலத்திலும் மறையவில்லை. 1949ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி கோட்சே தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முன், ஆர்எஸ்எஸ் பிரார்த்தனையின் போது உச்சரிக்கப்படும் முதல் நான்கு வாக்கியங்களைச் சொன்னார்.இதுவும் கூட, "கோட்சே அந்த அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது" என்று ஜா குறிப்பிடுகிறார். "காந்தியின் கொலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ்ஸை விலக்கி வைப்பது வரலாற்றில் புனையப்பட்ட கதை," என்றும் கூறுகிறார் திரேந்திர ஜா.