இந்தியா மீது டிரம்ப் புகார்

17 October 2020

வாஷிங்டன்:''உலகில் காற்று மாசு அதிகரிப்பதற்கு, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளே காரணம்,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவில், அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் நிறுத்தப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு, டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், வடக்கு கரோலினாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், டிரம்ப் பேசியதாவது:உலக அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தான் காரணம். காற்றில், அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை, இந்த நாடுகள் தான் வெளியேற்றுகின்ற. 

அமெரிக்காவைப் பொறுத்த வரை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், எரிசக்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளது. பிளாஸ்டிக்குக்குப் பதிலாக, காகிதத்தை மாற்றுப் பொருளாக மாற்ற முடியும் என நான் நினைக்கவில்லை. குளிர்பானத்தை, ஸ்ட்ராவுக்குப் பதிலாக, காகிதத்தில் குடிக்க முடியுமா... அமெரிக்க வேலை, அமெரிக்க மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

இதற்கு எப்போதும் நான் முன்னுரிமை அளிப்பேன். இவ்வாறு, அவர் கூறினார். பிரசார குழுவுக்கு கொரோனாஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பிரசார குழுவில், மூன்று பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசுடன், நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். கொரோனாவிலிருந்து மீண்ட அதிபர் டிரம்ப், முக கவசம் அணியாமல் பிரசாரத்தில் பங்கேற்றார்; இதை, கமலா ஹாரிஸ் விமர்சித்தார்.இந்நிலையில், ஜோ பிடன் பிரசார குழுவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து, டிரம்ப் கூறுகையில்,''கமலா ஹாரிஸ், கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அவருக்காக பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.