கண்டோன்மெண்ட் பகுதியில் திடீர் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் கொடி அணிவகுப்பு

19 June 2022

*கண்டோன்மெண்ட் பகுதியில் திடீர் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் கொடி அணிவகுப்பு*

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் எரிப்பு, கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திட்டத்தால் தற்போது போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. வடமாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்திலும் இந்த போராட்டம் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக திருச்சியில் நேற்று முன்தினம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேசியக்கொடியுடன் சோழன் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று தண்டால் எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் இளைஞர்கள் போராட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளதால், திருச்சி மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையம் வரை போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மேலும் கண்டோன்மெண்ட் பகுதியிலுள்ள 117 பட்டாலியன் மற்றும் ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


செய்தியாளர்: பஞ்சாபகேசன், திருச்சி