இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை

28 May 2022

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய நாயுடு இன்று திறந்து வைக்கிறார்.




தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடந்த மாதம் அறிவித்தார். அந்த அறிவிப்புடன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழுஉருவச்சிலை நிறுவப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 1.70 கோடி ரூபாய் மதிப்பில், 16 அடி உயரத்தில் கருணாநிதியின் வெண்கலச் சிலை, 12 அடி உயர பீடத்தில் வடிவமைக்கப்பட்டு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.


இன்று மாலை 5.30 மணிக்கு இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்குகொண்டு, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய நாயுடு சிலையைத் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து கலைவாணர் அரங்கில் விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ள நிலையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விழா ஏற்பாடுகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பும் மும்முரப்படுத்தப்படுகிறது.