பாஜக 3-வது பெரிய கட்சியா.

23 February 2022

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்திலேயே பாஜகதான் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது என அக்கட்சியினர் சொல்லி வருகின்றனர்.


ஆனால் உண்மை அப்படி அல்ல... பாஜக செல்வாக்காக இருக்கும் கன்னியாகுமரியில் கூட போராடித்தான் கணிசமான இடங்களை பாஜக பெற வேண்டிய நிலையில் இருந்தது என்கின்றன புள்ளி விவரங்கள்.


தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
அதிமுக மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த நிலையில் திமுக, அதிமுகவைத் தொடர்ந்து 3-வது பெரிய கட்சியாக பாஜக விஸ்வரூபம் எடுத்துவிட்டது என அக்கட்சியின் தலைவர்கள் பேசி வருகின்றனர்.


தமிழகத்தில் பாஜக 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துவிட்டதா? உண்மைதான் என்ன? மாநகராட்சிகளில் 22, நகராட்சிகளில் 56, பேரூராட்சிகளில் 230 இடங்களில் வெற்றி. இதுதான் பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற இடங்கள். இதில் நாகர்கோவில் மாநகராட்சியில்தான் அதிகபட்சமாக 12 வார்டுகளில் பாஜக வென்றுள்ளது. ஆனால் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றி இருக்கிறது. நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போது 2 முறை பாஜக கைப்பற்றியது. இத்தனைக்கும் தனித்துப் போட்டியிட்டும் கூட நாகர்கோவில் நகராட்சிப் பதவியை பாஜக கைப்பற்றிய காலமும் இருந்தது. இப்போது நாகர்கோவில் எனும் கோட்டையை பாஜக பறிகொடுத்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலேயே கொல்லங்கோடு, குளச்சல், குழித்துறை நகராட்சிகளிலும் கணிசமான இடங்களைப் பெற்றிருக்கிறது பாஜக. இதனைத்தாண்டி கடையநல்லூர், செங்கோட்டை நகராட்சிகளில்தான் பாஜக சில இடங்களை கைப்பற்றி இருக்கிறது. பிற இடங்களில் எல்லாம் சிங்கிள் டிஜிட் கணக்குதான். சென்னை மாநகராட்சியிலும் கூட சிங்கிள் டிஜிட் என்பது கவுரம். வெறும் ஒரு சீட்தான்.

பேரூராட்சிகளில் பாஜக 230 வார்டுகளில் வென்றிருக்கிறது. ஆம் உண்மைதான். அப்படியானால் பாஜகவின் வளர்ச்சி விஸ்வரூபம்தானே? என்கிற கேள்வி எழும். இந்த கேள்விக்கான பதில் 2011 தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் இருக்கிறது. அப்போதும் பாஜக 185 பேரூராட்சி இடங்களில் வென்றிருந்தது. 2011 தேர்தல் களத்தில் தேமுதிக 395 பேரூராட்சி வார்டுகளில் வென்றிருந்தது. இப்போது அந்த கட்சி இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. கடந்த 10 ஆண்டு காலத்தில் பேரூராட்சிகளில் பாஜக அதிகபட்சமாக 50 இடங்களைக் கூடுதலாக பெற்றிருக்கிறது. இதிலும் கூட 180 பேரூராட்சி வார்டுகள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்ததுதான். இந்த கள யதார்த்தங்களை மறைத்துவிட்டு தமிழகத்தில் பாஜகவானது திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக 3-வது இடத்துக்கு வந்துவிட்டது என பரப்புவது பொய்தான்.

ஏனெனில் பேரூராட்சி வார்டுகளில் திமுக 4388 இடங்களில் வென்றுள்ளது; அதிமுக 1206 இடங்களைக் கைப்பற்றி உள்ளது; காங்கிரஸ் கட்சி 368 இடங்களைப் பெற்றுள்ளது. இந்த 3 கட்சிகளும் தமிழகம் முழுவதுமாக பெற்ற இடங்கள் இவை. கன்னியாகுமரி போன்ற ஒரே ஒரு பெல்ட்டில் அள்ளிய இடங்கள் அல்ல. பேரூராட்சிகளில் திமுக 57.58% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக 15.82%; காங்கிரஸ் 4.83% பெற்றுள்ளது. பாஜக பெற்றுள்ளது 3.02% வாக்குகள்தான். திமுக, அதிமுக என ஜாம்பவான் கட்சிகள் பெற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் பாஜகவின் இடங்கள் கட்டெறும்பு கணக்குதான்.

40 ஆண்டுகாலமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்ளே குடியிருந்து வரும் பாஜகவால் தமிழகத்தின் இதர பகுதிகளில் கால்பதிக்கவே முடியவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. அதேபோல் தமிழகத்தில் பாஜக வந்துவிட்டது என்பதும் பசப்புரைதான். ஏற்கனவே இருந்த இடங்களில் தங்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. இன்னும் சொல்லப் போனால் கன்னியாகுமரியைத் தாண்டி கொஞ்சம் கனவு கண்டிருந்த கோவை உள்ளிட்ட பகுதிகளை பறிகொடுத்திருக்கிறது பாஜக என்பதே கள யதார்த்தம்.